Skip to main content

"என் அப்பா செய்த அடாவடித்தனம்!" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ!

Published on 25/01/2021 | Edited on 26/01/2021

 

Adavadi father -vijaysethupathi- viral video

 

'சில்லுக்கருப்பட்டி' இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'ஏலே'. இப்படத்தில் சமுத்திரக்கனி 'அடாவடியான அப்பா'வாக நடிக்கிறார். ஒட்டு வீடு, ஐஸ், சைக்கில், பம்பரம் என கிராமத்து நினைவுகளைச் சுமந்து வந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் உள்ளத்தையும் வருடியது.

 

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக 'அடாவடி அப்பா' எனும் தலைப்பில் நடிகர் விஜய் சேதுபதி தனது அப்பா குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கும் என் அப்பாவுக்கும் இடையே நிறைய இனிமையான சண்டைகள் நடந்துள்ளது. நான் இன்று சினிமாவில் இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கியமான காரணம் என் அப்பா வாழ்க்கையை நான் பார்த்தது தான் என்று நினைக்கிறேன். 


என் அப்பா செய்த அடாவடித்தனத்தில் ஒன்று, ஒருமுறை அக்கம் பக்கதில் உள்ளவர்களோடு நாங்களும் குற்றாலத்துக்குப் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. டிக்கெட் கிடைக்காததால், அன்ரிசர்வில் வர வேண்டியதாக இருந்தது. அப்போது இடையில் ஒருவர் ஏறினார். வழிமுழுவதும் அவர் பிரச்சனை செய்துகொண்டே வந்தார். அந்த ரயிலில் இருந்த மற்றவர்கள் அதை சமாளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, எங்க அப்பா திடீரென எழுந்துவந்து அவருடைய முகத்தில் ஒரு மிதி மிதித்துவிட்டு திரும்பப் போய் படுத்துவிட்டார். அதனால், மிதி வாங்கியவர் கத்திக்கொண்டே வந்தார். சென்னை வந்ததும் உன்னை வெட்டுவேன் குத்துவேன் என்று கூறிக் கொண்டே இருந்தார். இதனால், எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், சென்னை வந்தபிறகு அந்த நபர் ஒரு பக்கமாகவும், நாங்கள் ஒரு பக்கமாகவும் சென்றுவிட்டோம். எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

 

இதுகுறித்து நான் என்னுடைய அப்பாவிடம், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அப்பா, 'அவர் பிரச்சினை செய்துகொண்டே இருந்தார், அதனால்தான் அவரை மிதித்தேன். அவர் சென்னை வந்ததும் எதுவும் செய்ய மாட்டார் என்று எனக்குத் தெரியும்' என்று கூறினார். அந்தப் பிரச்சினையை அவர் மிகவும் எளிதாகக் கையாண்டவிதம் என்னை ஆச்சரியப்படுத்தியது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்