
கேரளா பள்ளிபுரம் தேவாலயத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் கலந்து கொண்டு “போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நான் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” எனப் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் வின்சி அலோசியஸ், தன் பேச்சிற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர் தனக்கு நடந்த மோசமான அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார். அவர் அந்த வீடியோவில் பேசியதாவது, “சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் நான் பேசியதற்குப் பல விதமான கருத்துகள் வந்தன. அந்தக் கருத்துகளைப் பார்த்த போது, நான் ஏன் அப்படி பேசினேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டார். அவருடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் எனது உடையில் சில சிக்கல் இருந்தது, அதை சரி செய்ய நான் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த அந்த நடிகர் இதை சரி செய்ய நான் உதவுகிறேன் என சொல்லி என் கூடவே வருவதாக சொன்னார். இதனை அனைவரின் முன்பும் சொன்னதால் எனக்கு சங்கடமாகிவிட்டது.

பின்பு ஒரு காட்சியின் ரிஹர்சலின் போது அவரது வாயிலிருந்து வெள்ளை கலரில் ஒரு துளி டேபிலில் சிந்தியது. அதை பார்க்கையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தொந்தரவாக மாறியது. நீங்கள் தனிப்பட்ட வாழ்கையில் போதைப்பொருள் பயன்படுத்துவது வேறு விஷயம். ஆனால் அதை தொழில் சூழலை பாதிக்கும் வகையில் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் என்னால் வேலை பார்க்க முடியாது. ஒருவர் தான் செய்யும் செயல் மற்றவர்களை பாதிக்கும் என்பதை உணராதவருடன் நான் வேலை பார்க்க விரும்பவில்லை. இது எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு, அதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு சுராஜ் வெஞ்சுரமூடு மற்றும் சௌபின் சாஹிர் நடிப்பில் வெளியான ‘விக்ருதி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்பு பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இடையே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘ரேகா’ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இப்படதிற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதை அவர் பெற்றார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘மாரிவில்லின் கோபுரங்கள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்திருந்த அவர் இப்போது ‘சூத்ரவக்யம்’ என்ற் தலைப்பில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார்.