நட்சத்திர வாரிசாக திரைத்துரையில் அறிமுகமான ஸ்ருதிஹாசன் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதன்பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு இம்ரான் கான் நடிப்பில் வெளியான லக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதன் பிறகு பல ஹிட் படங்களில் நடித்து ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகவும், பாடகராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துரையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது.
திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது.
ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விஷயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன்.
இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை. எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.