சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகை பவுலின் எனும் தீபா (29), கடந்த வாரம் அவரது அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். பின்பு பிரேதப்பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனிடையே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார். முதற்கட்டமாக நடிகை தீபாவின் அறையை போலீசார் சோதனை செய்த போது, அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து தீபாவின் காணாமல் போன ஐபோன், அவரது நண்பர் பிரபாகரனிடம் இருந்து மீட்கப்பட்டது. மேலும் தீபா பயன்படுத்திய 3 செல்ஃபோன்கள் 1 டேப் ஆகியவை மீட்கப்பட்டு ஆய்வு செய்வதற்காக தடயவியல் ஆய்வுக்கு போலீசார் அனுப்பினார். இது தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீசார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தீபாவின் காதலனாக கூறப்படும் சிராஜூதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாக சிராஜூதீனிடம் தீபா வாக்குவாதம் செய்ததாகவும், அதனை தொடர்ந்து சிராஜூதீன் தம்மை உடனடியாக தீபா வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் போலீசார் தீபாவின் காதலன் சிராஜூதீனிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், தீபாவிற்கு தோல் சம்பந்தமான பிரச்சினை இருந்ததாகவும் அவரது நண்பர் ஒருவர் பல் மருத்துவர் மூலமாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறினார். மேலும் கடந்த சில மாதங்களாக தீபா தன்னை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் ஆனால் தான் ஒரு நல்ல நண்பராக பழகி வந்ததால் தீபாவின் காதலை ஏற்று கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் சருமப் பிரச்சனைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள தீபாவின் செல்போன் முடிவுகள் வந்த பிறகே இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.