Skip to main content

நடிகை பூஜா பட் கொடுத்த வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

actress pooja bhatt land issue

 

நீலகிரியில் உள்ள கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம். குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை 10 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். பின்பு பத்து ஆண்டுகள் கழித்து குப்பன் இந்த நிலத்தை விற்றுள்ளார். அதில் ஒரு பகுதியை பல பேரிடம் கை மாறி பாலிவுட் நடிகை பூஜா பட் 1999 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். இவர் தமிழில் கல்லூரி வாசல் படத்தில் நடித்தவர்.   

 

ஆனால் கோத்தகிரி வட்டாட்சியர், பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பூஜா பட் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது நீதிமன்றம். 

 

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் பூஜா பட். இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சய் வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி. பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், பூஜா பட்டிடம் இருந்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் கோத்தகிரி தாலுகா தாசில்தாரால் தொடங்கப்பட்டுவிட்டதாக வாதிட்டார். இதை பூஜா பட்டின் வழக்கறிஞர் மறுத்து, நிலம் இன்னும் பூஜா பட் வசம்தான் உள்ளதாகத் தெரிவித்தார். 

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நிலத்தை மீட்டது தொடர்பான நிலை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்