பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் மீது, சில தினங்களுக்கு முன்பு இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவியான கல்கி கோச்லீன், அவருக்கு ஆதரவு அளித்துள்ளார். அனுராக் காஷ்யப்பிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் "நடிகை பாயல் கோஷ், இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சட்டரீதியான பார்வை, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதை நிரூபிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. சம்பந்தப்பட்ட ஒருவரையோ அல்லது அனைவரையுமே அழிக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு சமூகவலைதளப் பயனர் ஒருவர், உங்களுக்கு நெருக்கமான யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இதையேதான் சொல்வீர்களா என்று கேட்டிருந்தார்.
அதற்கு கஸ்தூரி, "நெருங்கியவர்கள் என்ன, எனக்கே நடந்திருக்கிறது, இது இப்படித்தான். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆறுதல்கள் உண்டு. ஆனால், என் தனிப்பட்ட பார்வை என்பது சட்டமல்ல. பொய் குற்றச்சாட்டுகளை அடையாளப்படுத்தும் வகையில்தான் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதாரங்களைச் சார்ந்துதான் இருக்க வேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.