சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமாகி, திரையுலகிலும் 'கருப்பசாமி குத்தகைதாரர்', 'வெடிகுண்டு முருகேசன்', 'சீடன்' போன்ற படங்களில் நடித்தவர் காமெடி பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம். ரைஸ் அட்வர்டைசிங் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இதனிடையே வெங்கடேஷின் மனைவி, வெங்கடேஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருப்பினும் ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருடன் தொடர்ந்து பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, கணவர் மீதான கோபத்தில் அவரை அடிக்க தனது வீட்டில் கார் ஓட்டுநராக இருக்கும் மோகன் என்பவரிடம் சொல்லித் திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்த நிலையில், கால்களை உடைக்க ராஜ்குமார் ஒரு லட்சம் கேட்டதால், பா.ஜ.க. பட்டியல் அணி மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் உறவினரான வைரமுத்து என்பவரிடம் பானுமதி உதவி கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க பற்றி தவறாக பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.
பின்பு வெங்கடேஷைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் வைரமுத்து. இதில் வெங்கடேஷின் இரு கால்களும் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்துப் போலீசில் வெங்கடேஷ் புகார் அளித்த நிலையில், மனைவி பானுமதி, ராஜ்குமார், மோகன், வைரமுத்து, ஆனந்தராஜ், மலைசாமி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.