வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். 'ஏகே 61' என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி, வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வீரா தான் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "அஜித்துடன் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அவர் இருக்கும் இடத்தை அடைய அழகும், மற்றும் ஒரு பண்புள்ள மனிதராக இருப்பதை விட இன்னும் நிறைய தேவை என்பதை உணர்ந்தேன். அஜித்தின் வெற்றிக்கு தன்னம்பிக்கை, மரியாதை, ரத்தம், வியர்வை சிந்தி உழைப்பது என பல விஷயங்கள் காரணமாக உள்ளன. அவருடன் இணைந்து நடித்த சில நாட்களிலே அதை நான் தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் நடிகர் அஜித் மிகவும் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.