நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்தியேன் சென்னையில் சமீபத்தில் திறக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்டார்.
அதனைப் பார்வையிட்டுவந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், "காவல்துறை அருங்காட்சியகம் பற்றி சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன். கேள்விப்படும்போது காவல்துறை அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும் என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது; போய் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. நானும் காக்கி சட்டை குடும்பத்திலிருந்து வந்தவன்தான். எனது அப்பா சிறைத்துறை கண்காணிப்பாளராக இருந்தார். எனவே அந்தத் துறை மீது எப்போதுமே தனி ஈர்ப்பும் பிரமிப்பும் எனக்கு உண்டு.
நமது ஊரில் காவல்துறை தொடங்கப்பட்டதிலிருந்து, எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது, அதில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் என்னென்ன என்பதையெல்லாம் முழுமையாக இங்கு வைத்துள்ளார்கள். அதைத் தாண்டி, பார்க்க வருபவர்களுக்கு அனைத்தையும் அழகாக விளக்குகிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நமக்குத் தெரிந்த விஷயமாக இருந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு புது கதை, புது விஷயம் இருக்கிறது. காவல்துறை அதிகாரியாக வேண்டும் என விரும்புவோர் இந்தக் காவல்துறை அருங்காட்சியகத்தை வந்து பார்க்க வேண்டும். காவல்துறை அதிகாரியாக வேண்டுமென்றால் அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற விவரங்களும் ஒரு டிவியில் ஒளிபரப்பாகிறது. இதை பொதுமக்கள் வந்து பார்த்தால், காவல்துறை மற்றும் சிறைத்துறையின் பாரம்பரியம் என்னவென்று தெரியும். பேரிடர் காலத்தில் என்னவெல்லாம் செய்கிறார்கள், வழக்கமான பணிகள் என்ன என அனைத்தையுமே தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இது சிறந்த இடம் என்று சொல்லித்தான் என்னை அழைத்தார்கள். இங்கு வந்து பார்த்தபோது உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறது. அனைவரும் இந்த அருங்காட்சியகத்தை வந்து பார்வையிடுங்கள். உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்" எனக் கூறினார்.