காமெடி நடிகராக மக்களுக்கு பரிட்சயமானவர் முத்துகாளை. குறிப்பாக வடிவேலுடன் நிறைய காட்சிகளில் நடித்து பிரபலமானவர். முதலில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய அவர், பின்பு நகைச்சுவை நடிகராக மாறினார். மின்சார கண்ணா, அன்பே சிவம், சிவாஜி என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக 2017ல் பி.ஏ தமிழ் வரலாற்றில் 2ம் வகுப்பிலும், 2019ல் எம்.ஏ தமிழில் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். 58 வயதான முத்துக்காளை 3 பட்டம் வென்றுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய அவர், “இன்னும் நிறைய ஆசைகள் இருக்கு. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடியிலிருந்து இப்போது வரை ஒயின் ஷாப் வாசலில் படுத்துகிடப்பது போல நிறைய மீடியாக்களில் வந்து கொண்டிருக்கிறது. நான் குடியிலிருந்து மீண்டு வந்து 7 வருஷம் ஆகப்போகிறது. அதை மாத்த வேண்டும் என நினைத்தேன். எல்லாரையும் திரும்பி பார்க்க வைக்க, ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என ஆசைப்பட்டேன். இப்போது மூன்று டிகிரி வாங்கியிருக்காரா என திரும்பி பார்க்கிற அளவிற்கு முயற்சி செஞ்சிருக்கேன். அதனால் எல்லாரும் முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும். இதன் பிறகு மது பற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளேன். மதுவால் நான் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளேன். அது பற்றி படித்து, ஒரு 2 பேரை மதுவிலிருந்து மீட்டேன் என்றால், அதுவே எனக்கு பெருமை” என்றார்.