அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன், ஆரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளவரசுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"ப்ரொடக்ஷன் ஆபிஸில் இருந்து கால் பண்ணி அருண்ராஜா காமராஜ் படம், படத்தில் நடிக்க டேட் இருக்கா என்று கேட்டார்கள். நான் உடனே சென்று அருண்ராஜா காமராஜை சந்தித்தேன். அவர் எனக்கு கேரக்டர் பத்தி சொன்னார். ரீமேக் படம் என்று சொன்னதும், இவர் ஏன் ரீமேக் படம் எடுக்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அருண்ராஜா மண் சார்ந்த மனிதர். அவருடைய சிந்தனையே அப்படித்தான் இருக்கும். அதன் பிறகு, உதயநிதி நடிக்கிற விஷயத்தைச் சொன்னார். பின்னர் பொள்ளாச்சியில் ஷூட்டிங் ஆரம்பித்தோம். இப்படித்தான் இந்தப் படத்திற்குள் நான் வந்தேன்.
நானும் அருண்ராஜா காமராஜும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம். அவருடைய உடல்மொழி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, 'நான் 'கனா' என்று ஒரு படம் எடுக்க போறேன் சார், நீங்க நடிக்கிறீங்களா, டேட் இருக்கா' என்று கேட்டார். அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, 'எப்ப ஷூட்டிங் என்று சொல்லுங்க, நான் வந்துடுறேன்' என்றேன். இப்படி அவருடன் ஏற்கனவே நல்ல அறிமுகம் இருந்ததால் இந்தப் படத்தில் என்னால் எளிமையாக நடிக்க முடிந்தது.
பார்த்திபன் சார் கிறுக்கல் என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். அந்த விழாவிற்கு நான்தான் கேமரா மேன். அந்த விழாவிற்கு கலைஞர், மு.க.ஸ்டாலின் வந்திருந்தனர். ஸ்டாலின் சார் உதயநிதியையும் அழைத்து வந்திருந்தார். அப்போது உதயநிதி எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். மகனைவிட இளமையாக இருக்கும் ஸ்டாலின் அவர்களே என்று அந்த மேடையில் பார்த்திபன் சார் பேசினார். அதற்கு கலைஞர் ரொம்பவும் சிரித்தார். அந்த விழாவில்தான் உதயநிதி தம்பியை முதலில் பார்த்தேன். அவர் தயாரிப்பாளரான பிறகு அடிக்கடி ரெட்ஜெயண்ட் ஆபிஸிற்கு போவேன். அதனால் அவருடனும் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது.
உதயநிதி தம்பி ரொம்பவும் எளிமையாக இருக்கும். படங்களில் அமைச்சர் மகன் இப்படி இருப்பார், முதல்வர் மகன் இப்படி இருப்பார் என்று பார்த்து பழகிவிட்டதால் அவர் எளிமையாக இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. நெஞ்சுக்கு நீதி படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள்".