நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்குப் புகழ் பெற்றவர். ஏதேனும் ஒரு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்படும்போதே அங்கு தனது பேச்சு புதுமையாக, வித்தியாசமாக, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கவேண்டுமென மெனக்கிடுபவர். அவர் பிறருக்கு அளிக்கும் பரிசுகளும் அப்படித்தான் மிகுந்த சிரத்தையெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் தொடங்கி, தான் இயக்கும் படங்கள் வரை தான் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்து அதில் வெற்றி பெற்றவர் பார்த்திபன்.
'புதியபாதை' தொடங்கி தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வரை தான் இயக்கிய படங்களில் அந்தந்த காலத்தில் புதுமையான பல விஷயங்களை முயன்ற பார்த்திபன், அந்த புதுமை முயற்சிகளாலேயே நல்ல வெற்றிகளையும் பேரையும் பெற்றவர். அதே நேரம், அதனாலேயே மிகப்பெரிய தோல்விகளை அடைந்து பொருளையும் இழந்திருக்கிறார். இடையிடையே பிறர் படங்களில் நடித்தாலும் மீண்டும் மனம் தளராமல் தனது முயற்சியை தொடர்வார். அவர் கடைசியாக இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெற்றி பெறவில்லை. அதற்கு முந்தைய படமான 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படம் சிறப்பான வெற்றியை பெற்றது.
தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒருவர் நடித்து அவரே இயக்கியுள்ள படமாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' வெளிவர இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிடும்போது அதனுடன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
வீடியோவில் பார்த்திபன் பேசியது... "சூப்பர்ஸ்டாரின் தர்பார், உலகநாயகனின் இந்தியன் 2, மிஸ்டர் விஜய்யின் பிகில், மிஸ்டர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை... இப்படி பிரமாண்டமான படங்கள் தயார் நிலையில் இருக்கும்போது ஒரே ஒருத்தர் நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படமும் வெளிவர இருக்கிறது. படம் பார்த்துட்டு மூணாவது நாளாவது நாள் நல்லா இருக்கு என்று சொல்வதற்கு பதிலாக முதல் நாளே ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒரே ஆள் இயக்கி நடித்ததால் மட்டுமே இதை நான் விருதுகளுக்கு அனுப்புகிறேன். ஆனால், இது ஜனரஞ்சமான ஒரு படமாகத்தான் இருக்கும். உலகில் இதுவரை பனிரெண்டு படங்கள் மட்டுமே ஒருவர் நடித்த படங்கள். அவற்றை விட என் படத்தில் என்ன சிறப்பு என்றால் நானே இப்படத்தை இயக்கியிருப்பதுதான். படத்தைப் பார்த்த பெண்கள் இறுதியில் கண்ணீரை அடக்கமுடியவில்லை என்றார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான உங்களுடன் கனெக்ட் ஆகக்கூடிய ஒரு படமாக இது இருக்கும். என் படத்தை நானேதான் கூவி விற்க வேண்டும். அந்தக் கூவலின் ஒரு பகுதிதான் இந்த ட்ரெயிலர்."
பார்த்திபனின் இந்த முயற்சி திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் படம் மக்களின் பார்வைக்கு வெளிவர இருக்கிறது.