‘இறுகப்பற்று’ படம் மூலம் பிரபலமான அபர்ணதி, தற்போது ‘நாற்கரப்போர்’ என்ற படத்தில் கதாநாயாகியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அ.வினோத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீ வெற்றி இயக்கியிருக்க வேலாயுதம் தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகை நமிதா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “இந்த படத்தில் அபர்ணதி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் என்ன வருத்தமென்றால் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நடிகர்கள் தொடர்ந்து புரமோஷனுக்கு வரமாட்டோம் என்பது தமிழ் சினிமாவின் சாபக் கேடாக ஆகிவிட்டது. அபர்ணதியை தயாரிப்பாளர் கால் செய்து புரமோஷனுக்கு அழைத்தபோது, வரமாட்டேன்... அதற்கு தனியாக பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். பிறகு நான் அவருக்கு கால் செய்து ‘படத்தை தற்போது ரிலீஸ் செய்வதே பெரிய விஷயமாக உள்ளது. அதனால் புரமோஷனுக்கு நீங்க கண்டிபாக வர வேண்டும், வராமல் இருப்பது நியாயமில்லை’ என்றேன். அதற்கு அவர் வரமுடியாது என்றும் சில கண்டிஷன்களையும் வைத்தார். அதையெல்லாம் சொன்னால் சர்ச்சையாகிவிடும்.
‘மேடையில் உட்காரும்போது அருகில் அவருக்கு சமமானவர்கள்தான் உட்காரவேண்டும்’ என்றெல்லாம் பேசினார். எனக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. அதன் பின் அவரிடம் புரொமோஷனுக்கு வருவதால் எழும் சிக்கல் குறித்து நடிகர் சங்கத்தில் புகார் தெரிவியுங்கள் என்றேன், அதற்கு அவர் ‘நடிகர் சங்க உறுப்பினராக இல்லை’ என்றார். பின்பு அவர் ‘ரூ.3 லட்சம் கொடுத்தால்தான் புரமோஷனுக்கு வருவேன் இல்லையென்றால் வரமாட்டேன்’ எனச் சொல்லிவிட்டார். நான் அதற்கு ‘உங்களுக்கு கொடுக்கும் பணத்தை வைத்து கூட புரோமோஷன் பண்ணிக்கொள்கிறோம்’ என்று சொல்லிவிட்டு அதை விட்டுவிட்டேன். இரண்டு நாளைக்கு பிறகு கால் செய்து ‘சாரி சார் நீங்க யாருனு தெரியாம பேசிட்டேன், புரமோஷன் வந்துடுறேன்’என்று சொன்னார். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை. இன்றைக்கு அவர் வரவில்லை. இப்படிப்பட்ட நடிகைகளே தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை. தயாரிப்பாளர்களை காயப்படுத்திவிட்டு சினிமாவுக்கு வந்து அவர் என்ன செய்யப்போகிறார், அப்படியே இருந்து கொள்ளட்டும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் மற்ற தயாரிப்பாளர்கள், நடிகைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். இப்படத்தின் தயாரிப்பாளர் என்னுடைய ஊர். அதனால்தான் நானும் சப்போர்ட் பண்ணுகிறேன்” என்றார்.