Skip to main content

விஜய் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு - 6 பேர் காயம்

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
6 people injured in vijay event

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அடிப்படை தேவைகள், சாப்பாடு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தனர். மேலும் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தினார்கள். 

இந்த நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்த சூழலில் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்ச்சி நெல்லை கே.டி.சி நகரில் ஒரு அரங்கத்தில் நடக்கிறது. அதில் கிட்டத்தட்ட 1500 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25000 என விஜய் வழங்கினார். 1500 குடும்பங்களுக்கும் அங்கு மதிய சாப்பாடும் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கானோர் அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர். நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு அரங்கத்திலிருந்து புறப்பட்ட விஜய், காருக்குள் செல்ல முயன்றார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் 4 ஆண்கள் உட்பட 6 பேர் கீழே விழுந்தனர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது பரப்பரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்