2006ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23-ம் புலிகேசி மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி இப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரிக்க திட்டமிட்டார். பின்னர் இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே மீண்டும் ஒப்பந்தம் செய்தார் இயக்குனர் சிம்பு தேவன். மேலும் இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கு அமைத்து இருந்தனர். இந்நிலையில் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டதனால் படம் நின்று போனது. அதிருப்தி அடைந்த ஷங்கர் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து நடிகர் சங்கம் மூலம் வடிவேலுவிடம் விளக்கம் பெறப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதே போல் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோர் புதிதாக புகார் ஒன்றை அளித்துள்ளனர். நடிகர் ஆர்.கே. புதிதாக ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தை தயாரிக்க இருந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை என்று ஆர்.கே. புகார் கூறியுள்ளார். இதுபோல் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஸ்டீபன் தயாரிப்பதாக இருந்த இந்த படத்தின் கதையை வடிவேலு மாற்ற சொன்னதால் படப்பிடிப்பு நின்றுபோனதாக குற்றம்சாட்டப்பட்டு வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு புகார்கள் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விசாரித்து வருகிறது. நடிகர் சங்கம் மூலம் வடிவேலுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.