தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள் குறித்த சுவாரசியமான விசயங்களை ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மிடம் விவரிக்கிறார்.
பகலில் வீட்டை உடைத்து பணம், நகைகள் திருடக்கூடிய திருடர் ஒருவருடைய கதை இது. இரவில் அவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தது. அவரைப் பார்த்தால் திருடன் என்றே கூற முடியாத அளவுக்கு அவருடைய உடைகளும் அலங்காரமும் இருக்கும். ஒருமுறை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டில் அவர் திருடினார். பின்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டபோது, கைரேகையை வைத்து அவர்கள் இவரைக் கண்டறிந்தனர். பொதுவாக அவர் திருடும் இடங்களில் இருக்கும் உணவை நன்றாக சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் அங்கேயே படுத்தும் தூங்குவார். வடிவேலு காமெடியில் நாம் பார்க்கக்கூடியது போன்ற ஒரு நபர் அவர்.
80களில் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தின் உதவியாளர் வீட்டில் திருட்டு நடைபெற்றது. திருட்டு நடைபெற்ற இடத்தில் இவருடைய கைரேகை தான் இருந்தது. ஆனால் அவர் அப்போது வேலூர் சிறையில் இருந்தார். வழக்கில் ஆஜராக போலீசாரால் சென்னை அழைத்து வரப்பட்டபோது போலீசாரையே ஏமாற்றி இந்தக் கைவரிசையில் அவர் ஈடுபட்டது தெரிந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி. இதனால் அந்தக் காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அவருக்குப் பிறகு அவருடைய மகன் இப்போது இதே தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய நடவடிக்கைகளால் போலீசாரையே பலமுறை சிக்க வைத்துள்ளார். ஜாலியான திருடனாக இருந்த அவர், பெரும்பாலும் தன்னுடைய கைரேகையினால் தான் சிக்குவார். அவருடைய மனைவி ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். அவரே ஒருமுறை தன்னுடைய கணவரை போலீசில் பிடித்துக் கொடுத்திருக்கிறார். திருடும் ஒவ்வொரு பொருள் குறித்த விவரங்களையும் ஒரு சீட்டில் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவருடைய வீடும் வேலூர், அவர் இருந்த சிறையும் வேலூர் என்பதால் வீட்டிலிருந்தே பல நாட்கள் அவருக்கு சாப்பாடு வரும். அவருக்கென்று தனியாக ஒரு ராஜ்ஜியம் அமைத்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தார்.