Skip to main content

கேன்சர் நோயாளிகளை வைத்து இன்சூரன்ஸ் மோசடி - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 06

Published on 14/08/2023 | Edited on 16/08/2023

 

rajkumar-solla-marantha-kathai-06

 

தனக்கு அதிர்ச்சியளித்த ஒரு வழக்கு குறித்து 'சொல்ல மறந்த கதை' தொடரின் வழியாக இன்சூரன்ஸ்  நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்

 

வடநாட்டில் நடந்த இந்த கேஸ் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இன்சூரன்ஸ் கம்பெனியில் ஏஜென்டாக பணிபுரிந்த ஒருவர் இன்சூரன்ஸ் குறித்து தெரிந்து கொள்கிறார். இளம் வயது மனிதர் அவர். படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள் வாழ்ந்த ஊர் அது. அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை அவர் அறிந்துகொண்டார். இறக்கும் நிலையில் இருக்கும் சிலருடைய வீடுகளுக்குச் சென்று அரசாங்கத்திடமிருந்து தான் இன்சூரன்ஸ் பணம் பெற்றுத் தருவதாகக் கூறி அவர்களுடைய பெயரில் இன்சூரன்ஸ் எடுத்தார். 

 

இறந்தவர்களின் உடலை வாங்கி, தலையில் வண்டியை ஏற்றி, அதன்பிறகு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று போஸ்ட்மார்ட்டம் செய்தார். அனைவருடைய இறப்புக்கும் தலையில் வண்டி ஏறிய சாலை விபத்து என்கிற ஒரே வகையான காரணம் சொல்லப்பட்டது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்தனர். இதில் ஏதோ தவறு நடக்கிறது என்கிற சந்தேகம் ஏற்பட்டது. பாலிசி ரெக்வஸ்ட் எந்த கம்ப்யூட்டரின் வழியாக செல்கிறது என்பதைக் கண்டறிந்தோம். இவனுடைய லேப்டாப் மூலமாகத்தான் செல்கிறது என்பதை அறிந்தோம். இந்த காலகட்டத்திற்குள் சுமார் 10 பேரை ஏமாற்றி 60 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அவர் சம்பாதித்தார். 

 

இவரைப் பிடிப்பதற்காக சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பிறகு மாரடைப்பால் அவர் காலமானார். அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் 25000 ரூபாய் தான் இருந்தது. கேன்சர் நோயாளிகளை ஏமாற்றிய இந்த கேஸ் என்னுடைய மனதை மிகவும் பாதித்த ஒன்று. அவர்கள் இறந்த பிறகும் அவர்களுடைய தலையில் வண்டியை ஏற்றிய கொடூரமாக கொல்லும் அளவிற்கு  அவர் இருந்தார். இது போன்ற வழக்குகளை வீட்டிற்குச் சென்றவுடன் மறந்துவிட வேண்டும் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்வேன். 

 

காந்தியையே சுட்டுக்கொன்ற நாடு இது. விளம்பரத்திற்காக எதையும் செய்வான் மனிதன். அனைத்து துறைகளில் இருப்பவர்களுக்கும் பணம்தான் இன்று பிரதானமாகிவிட்டது. இதுபோன்ற வழக்குகள் எங்களுக்குப் பழகிவிட்டன.