Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #10

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

marana muhurtham part 10

 

அத்தியாயம்- 10

 

பெண்கள் ஒரு விஷயத்தை வெளியில் சொல்லனும்னு நினைச்சா மைக்கே தேவையில்லை. ஊருக்கே தெரிஞ்சிடும். அதே அவர்கள் ஒரு விஷயத்தை மறைக்கனும்னு நினைச்சா, மனோதத்துவ டாக்டர் வந்து உண்மை கண்டறியும் சோதனை நடத்தினா கூட அவர்களிடம் இருந்து உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது.

 

கவியும் அப்படிதான். தியாவின் மரணத்திற்கான காரணங்களைத் தேடுவதில்  ரொம்பவும் ரகசியமாகச் செயல்பட்டாள்.

 

பர்தா போட்ட பெண், கவியின் எதிரே உட்கார்ந்திருந்தாள்.

 

"யாரும் பார்க்கலையே, கேர்புல்லாத் தானே வந்தீங்க?" என்று கவி சந்தேகத்துடன் கேட்டாள்.

 

அந்தப் பெண் ”ஆம்” என்று தலையாட்டினாள்.

 

கூல் காபியைக் குடித்துக்கொண்டே இருவரும் அரை மணி நேரம் பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்கள் வாயிலிருந்த ஸ்ட்ராவுக்குக் கூட கேட்டிருக்காது.

 

அப்படி ஒரு வினோதமான சைலண்ட் பாஷை அது. இந்த பாஷையைப் பேசுவதில் இப்போது உள்ள இளம் பெண்கள் கில்லாடிகள். அந்த பாஷையில் அவர்கள் நடந்துகொண்டும், பொது இடங்களில் அமர்ந்துகொண்டும், பயணத்தின் போதும், அலுவலக ஓய்வுக்கு இடையிலும், தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசுவதை நாம் பல இடங்களிலும் கண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டும் கேட்டிருக்க முடியாது. அப்படிதான் கவியும் புதிதாக வந்த பர்தா பெண்ணும் பேசினார்கள்.

 

பேசி முடித்துவிட்டுக் கிளம்பும் போது, பைல் ஒன்றை கவியிடம் கொடுத்து, ”இதில் அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் இருக்கு. பார்த்து கவனமாக டீல் பண்ணு” என்று சொல்லிவிட்டு அந்த பர்தா பெண் சட்டென் எழுந்து நடந்தாள்.

 

டேபிளின் மூலையில் இருந்து எழுந்த கவி, அவள் அமர்ந்த இடம் அங்குள்ள கேமரா வியூவில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, வேறு ஒரு பக்கமாக இயல்பாக நடந்து சென்றாள்.

 

கவி வீ்ட்டிற்கு வருவதற்குள் இரவு 9 மணியாகிவிட்டது. கதவைத் திறந்த ஷாலுவின்  அத்தை, சுப்ரீ்ம் கோர்ட்  ஜட்ஜ் மாதிரி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டார். ”இப்படியாம்மா லேட்டா வர்றது.?” என்று அறிவுரையும் சொன்னார்.

 

அத்தனைக் கேள்விகளுக்கும் பொதுவாக "நான் மவுன்ட்ரோடில் இருக்கிற ஹிக்கிம் பாதம்ஸ் போய் புக் வாங்கிட்டு வந்தேன். சரியா பஸ் கிடைக்கலை. அதிலும் வேளச்சேரி டெர்மினசைக் கடந்து வரவே, ஒரு மணி நேரம் ஆகுது. பயங்கர டிராஃபிக் ஜாம். அதான் லேட்டாயிடுச்சு அத்தை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அவள் அறைக்குள் நுழைந்து கதவையெல்லாம் நன்றாகச் சாத்திவிட்டு, போனை எடுத்துப் பார்த்தாள், 10 மிஸ்டுகால். கவியின் அம்மா திலகாதான் முட்டிமோதிக்கொண்டு இருந்திருக்கிறார்.

 

’தியாவின் பிரச்சனையில் அம்மாவை மறந்துவிட்டேனே’ என நினைத்த கவி, அம்மாவிற்கு போன் பண்ணினாள்.

 

ஒரு ரிங் கூட போயிருக்காது. அம்மா உடனே எடுத்துவிட்டார். பாவம் பயந்துவிட்டார்கள் என நினைத்த  கவி,

"ஹலோ ம்மா" என்று உருகினாள்.

"என்னடி ஆச்சு? எத்தனை முறை கால்பண்றேன். ஏன் எடுக்கலை.? ரொம்ப பயந்துட்டேன்" என்று படபடப்பாகப் பேசினார் திலகா.

"சாரிம்மா. பிரண்ட்ஸ் கூட  குரூப் டிஸ்கஷன். அதான் எடுக்க முடியலைன்னு" தயங்காமல் பொய் சொன்னாள்.

"கவி, உன்னோட ஜி.பி.எஸ். என்னாச்சு? லொகேஷன் காட்டமாட்டேங்குது இப்ப நீ எங்க இருக்க?" என்று அம்மா குண்டைத் தூக்கிப் போட்டாள்.

 

ஜி.பி.எஸ்.ஸை வைத்து இவள் இருக்கும் லொக்கேசனைக் கண்டு பிடிச்சிடுவாங்களோன்னு டெல்லியிலிருந்து கிளம்பும் போதே, அதை முன்னெச்சரிக்கையாக ஆஃப் பண்ணிவிட்டாள்.

" ம்மா இங்க ரொம்ப மேக மூட்டமாக இருக்கும்மா. அதனால ஜி.பி.எஸ்.வேலை செய்யலைம்மா" என்று இவள் திட்டமிட்ட பொய்யைச் சொன்னாள்.

 

அம்மாவிடம் கொஞ்சிப்பேசியதில் கவியின் மனதிற்குப் புத்துணர்வாக இருந்தது. அதே உணர்வுடன் உறங்கச் சென்றாள்.

 

காலையில் எழுந்து வழக்கமான வேலைகளை வேகமாகச் செய்துவிட்டு  ஷாலுவின் அத்தையிடம் ”கிளாஸ்க்கு போறேன்” என்று சொல்லிவிட்டு, அவர்கள் கொடுத்த இட்லியைப் பிச்சுப் பிச்சு வாயில் போட்டுக்கொண்டு, அந்த வீட்டு வாசலைத் தாண்டி வெளியே வந்தாள் கவி. 

 

வேளச்சேரி டென்த் கிராஸில் இருந்த பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட்  வந்து பிளாட் எண் 45/ 20-ன் கதவைத் தட்டினாள்.

 

சங்கிலியால் இழுத்துக் கட்டப்பட்ட கதவு, ஒரு கோடு அளவிற்குத் திறந்தது. அந்தக் கோட்டின் வழியாக 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மெதுவாக எட்டிப்பார்த்தார். அவளைப் பார்த்ததும் அந்த கதவு மேலும் கொஞ்சம் தயாளம் காட்டித் திறந்தது. அந்தப் பெண்மணியின் திருத்தமான முகத்தில் சோகம் இழையோடியிருந்தது. 

’குடும்பத் தகராறோ என்னவோ?’ என நினைத்துக்கொண்டாள் கவி.  இருக்கட்டும்.

"சத்யா வீடு இதுதானே?" என்று கவி கேட்டாள்.

 

அந்த பெண் ஆமாம் என்பது போலத் தலையாட்டினாள்.

"நான் சத்யாவுடைய ஃபிரண்ட்  கவி. நுங்கம்பாக்கம் ஸ்கூலில் ஒன்னாப் படிச்சோம். நான் ஒரு வருசமா வெளிநாடு போயிட்டேன். இப்பதான் வந்தேன். சத்யாவைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். சத்யா இப்ப வேளச்சேரி கவிநிலா ஸ்கூல்லதானே படிக்கறா?”  என்று யதார்த்தமாகப் பேசினாள் கவி.

 

இதைக் கேட்டதும், அந்தப் பெண்மணி, முகத்தைப் பொத்திக்கொண்டு தேம்ப ஆரம்பித்துவிட்டார். கவிக்கு, அங்கு என்ன நடக்குதுன்னே புரியலை.

"அம்மா.. அழாதீங்க மா. பிளீஸ். நான் வேணும்னா போய்ட்டு இன்னொரு நாள் வரேன்" என்று திரும்ப எத்தனித்தாள் கவி.

"வேணாம் மா, நீ உள்ள வா. உனக்கு சத்யாவைப் பற்றி எதுவுமே தெரியாதா? அவ எல்லாரையும் விட்டுட்டு ஒரேயடியாய்ப் போய்ச் சேர்ந்துட்டாம்மா” என்று பெரிதாக அழுதார்.

 

கவிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த ஃபைலில் இருந்த சத்யா இறந்துட்டாளா? எப்போ? எப்படி? இப்ப என்ன செய்வது? என்று எதுவும் புரியாமல் உறைந்துபோய் நின்றாள்.

 

(திக் திக் தொடரும்)

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #9