நள்ளிரவில் சுதந்திரமடைந்தது பாகிஸ்தான். அந்த நாட்டில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடுப்பகலுக்குச் சற்று பிந்திய நேரத்தில் ஒரு 14 வயது சிறுமியின் தலையை தலிபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன. அந்தச் சிறுமியின் பெயர் மலாலா. அன்று காலை வீட்டைவிட்டு பள்ளிக்குச் சென்றவள், பிறகு அவளுடைய வீட்டுக்கு திரும்பவேயில்லை. தலிபான் தீவிரவாதிகளின் குண்டுகளால் துளைக்கப்பட்ட அவள் நினைவு இழந்த நிலையில் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அவள் இனி வீடு திரும்பமாட்டாள் என்றார்கள். ஆனால், அவளுக்கு நம்பிக்கை இருந்தது. மனப்பூர்வமாக நேசிக்கும் நாட்டைவிட்டு பிரிய யாருக்குத்தான் மனம் வரும்?
சிகிச்சை முடிந்து பர்மிங்ஹாம் நகரில் இருந்தாலும், தினமும் கண் விழிக்கும் போதெல்லாம் தனது பாகிஸ்தான் வீட்டு பழைய அறையை நினைத்துப் பார்க்கிறாள். அந்த அறையில் அவளுடைய பொருட்களும், உடைகளும் தரையில் சிதறிக்கிடக்கும். பள்ளியில் அவள் வாங்கிய பரிசுகள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது அவற்றை பார்க்க முடியாது. ஏனென்றால் அவளுடைய நாட்டுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் 5 மணிநேர வித்தியாசத்தில் அவள் இருக்கிறாள். பர்மிங்ஹாம் நகரில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. குழாய்களைத் திறந்தால் குளிர் நீரும், வெந்நீரும் கொட்டும். இரவு பகல் பாராமல் மின்சார விளக்குகள் பளிச்சிடும். இங்கு எண்ணெய் விளக்குகள் தேவையில்லை. சமையலுக்கு மின்சார அடுப்புகள் இருக்கின்றன. கேஸ் சிலிண்டர்கள் தேவையே இல்லை. உணவு வகைகள்கூட ரெடிமேடாக கிடைக்கின்றன. அனைத்தும் நவீனமாக இருக்கின்றன.
அவள் தங்கியிருக்கும் பர்மிங்ஹாம் அறையின் ஜன்னலோரம் வந்து நிற்கிறாள். ஏராளமான அழகிய கட்டடங்களும், வாகனங்கள் வரிசையாக பயணிக்கும் நீண்ட சாலைகளும், அழகிய நடைபாதைகளும், பசுமையான மரங்களும் தெரிகின்றன. ஜன்னலோரம் நின்றபடியே தனது கண்களை மூடினாள் மலாலா. தனது நாட்டை நினைத்து பார்க்கிறாள். அவளுடைய ஊர் இருக்கும் ஸ்வாத் சமவெளியை கற்பனை செய்கிறாள். பனி படர்ந்த உயர்ந்த மலைகளும், பச்சை அலை பாயும் வயல்களும், ஊதாநிறத்தில் ஓடும் தூயநீர் நதிகளும் தெரிகின்றன. ஸ்வாத் சமவெளியின் மக்களை பார்க்கும்போது அவளுடைய இதயம் புன்னகை பூக்கிறது. அவள் அவளுடைய பள்ளிக்கு திரும்புகிறாள். அங்கு அவளுடைய பழைய நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் இணைகிறாள். தனது தோழி மோனிபாவுடன் அமர்ந்து பேசுகிறாள். சிரிக்கிறாள். கற்பனையிலிருந்து விழித்துக் கொள்கிறாள். இப்போது அவள் பர்மிங்ஹாமில் தனது அறையில் இருக்கிறாள்.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அவளுடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த சம்பவம் நிகழ்ந்தது. பள்ளித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தேர்வுகளை நினைத்து பயப்படும் அவளுடைய தோழிகளைப் போல அல்ல அவள். உண்மையில் அவள் ஒரு புத்தகப்புழு. அன்று காலை வழக்கம்போலவே பள்ளிப் பேருந்தில் ஹாஜி பாபா சாலையை அவளும் அவளுடைய தோழிகளும் அடைந்தார்கள். சாலையிலிருந்து மண் வீதியில் நுழைந்தார்கள். ரிக்சாக்களிலும், சிறு வாகனங்களிலும் மாணவிகள் உதிர்ந்தார்கள். பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தபோது மாணவிகளின் இயல்பான இரைச்சல் இசையாக மாறியது. வகுப்பறைகளில் புத்தகப் பைகளை போட்டுவிட்டு, காலை பிரார்த்தனைக்கு கூடினார்கள்.
அந்தப் பள்ளி அவளுயை தந்தை உருவாக்கியது. அவள் பிறப்பதற்கு முன்னரே கட்டிவிட்டார். குஷால் பள்ளி என்று சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவளுடைய பள்ளித் தோழிகளில் பெரும்பாலோர் டாக்டர்கள் ஆக வேண்டும் என்றே விரும்பினார்கள். 15 வயதிலேயே அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள். உருது இலக்கணம், ஆங்கிலத்தில் கதை எழுதுவது என்று பன்முகத் திறமை பெற்றிருந்தாள். ஆனால், ஸ்வாத் சமவெளியின் முக்கிய நகரமான மிங்கோராவில் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்தது. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று அவர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். குறிப்பாக மலாலா படிக்கும் பள்ளிக்கு கூடுதல் அச்சுறுத்தல் இருந்தது.
வழக்கம் போலத்தான் அன்று காலையும் விடிந்தது. வழக்கமாக 8 மணிக்குத் தொடங்கும் பள்ளி, பரீட்சை நேரம் என்பதால் 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காக்கைகள் கரைந்தன. சேவல்களின் கூவல் சத்தம் காதில் விழுகிறது. ஆனால் மலாலா எழுந்திருக்கவில்லை. “செல்லக்குட்டி எழுந்திருக்கலையா?” மலாலாவின் அப்பா அவளைத் தட்டி எழுப்பினார். “ப்ளீஸ்ப்பா, இன்னும் கொஞ்ச நேரம் தூக்கிக்கிறேனே” என்று அவரிடம் சிணுங்கலாக கெஞ்சினாள் மலாலா. அவர் நகர்ந்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
“பூனைக்குட்டி இன்னுமா எழுந்திருக்கலை?” என்ற சத்தம் கேட்கிறது. இது மலாலாவின் அம்மா. அவளை அப்படித்தான் செல்லமாக அழைப்பாள். சத்தம் கேட்டதும் நேரமாகிவிட்டதை உணர்ந்தாள் மலாலா.
“ஓ.. பாபி… நேரமாயிருச்சு. நான் லேட்” என்று பரபரப்பாக எழுந்தாள் மலாலா. பாபி என்றால் சகோதரி என்று அர்த்தம். ஸ்வாத் சமவெளியின் கலாச்சாரத்தில் அப்பாவை பிரதர் என்றும் அம்மாவை சகோதரி என்றும் அழைக்கச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். முதன்முதலாக மலாலாவின் தாயை அவருடைய தந்தை பள்ளிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது, அவளுடைய ஆசிரியர்கள்… “மலாலா, உன்னோட பிரதர் உன்னுடைய சிஸ்டரை அழைச்சிட்டு வந்திருக்கார் பார்” என்று கூறினார்கள். அன்றிலிருந்து தனது தாயை அவள் மட்டுமல்ல, எல்லோருமே சிஸ்டர் என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.
மலாலா தனது வீட்டின் முன் அறையில்தான் படுத்திருப்பாள். அந்த நீளமான அறையில் அவள் படுக்கும் கட்டில் மட்டுமே இருக்கும். அதுபோக, ஒரு கேமரா இருந்தது. ஸ்வாத் சமவெளியில் அமைதியையும், பெண்குழந்தைகளின் கல்வி உரிமையையும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்ததற்காக கிடைத்த விருதுப் பணத்தை வைத்து அந்த கேமராவை வாங்கியிருந்தாள். மற்றபடி அறையில் இருந்த அலமாரி முழுக்க அவள் படிப்பில் முதலிடம் வந்ததற்காக கிடைத்த கோப்பைகள் நிறைந்திருந்தன. ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற அனைத்திலும் அவள் முதலிடத்தையே பெற்றாள்.
அவளுடைய பள்ளிக்கும் வீட்டுக்கும் தூரம் அதிகமில்லை. தொடக்கத்தில் நடந்துதான் செல்வாள். கடந்த ஆண்டுதான் அவள் மற்ற பெண்களுடன் பள்ளிப் பேருந்தில் செல்லத் தொடங்கினாள். பஸ்ஸில் வரும் தோழியருடன் அரட்டை அடித்துக்கொண்டு, பஸ் டிரைவர் உஸ்மான் அலியின் நகைச்சுவைக் கதைகளைக் கேட்டு கிண்டலடித்தபடி செல்வது அவளுக்கு பிடித்திருந்தது. நடந்து போகும்போது வேர்வையில் நனைந்துவிடுவாள். ஆனால், இப்போது அந்த தொல்லை இல்லை. இதுவே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஐந்து நிமிடத்தில் பஸ் பள்ளிக்குச் சென்றுவிடும்.
பள்ளிக்கு நடந்து செல்வதை தவிர்த்து பஸ்ஸில் போவதற்கு அவளுடைய தாயின் அச்சம்தான் காரணம். ஆண்டுதோறும் மலாலாவுக்கும் அவளுடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. அப்போதுகூட அவள் தனக்கு தலிபான்கள் மிரட்டல் விடுத்திருப்பதாக நினைக்கவில்லை. தலிபான்களின் பிற்போக்குத்தனத்தையும், பெண் கல்வியை அவர்கள் தடை செய்வது குறித்தும் மலாலாவின் தந்தை அடிக்கடி எதிர்த்து பேசுவார். அதுமட்டுமின்றி பெண் குழந்தைகளுக்காக பள்ளி நடத்துவதை தலிபான்கள் விரும்பவில்லை. அவளுடைய தந்தையுடன் பெண் கல்வியை வலியுறுத்தி பிரச்சாரம் செய்த அவருடைய நண்பர் ஜாஹித் கானை கடந்த ஆகஸ்ட்டில்தான் தலிபான்கள் முகத்தில் சுட்டிருந்தனர். அதையடுத்து மலாலா தனது தந்தையுடன் பிரச்சாரத்திற்கோ, வெளியிலோ செல்லும்போது கவனமாக இருக்கும்படி பலரும் சொல்வதை அடிக்கடி கேட்டிருக்கிறாள்.
மலாலாவின் வீடு சாலையிலிருந்து சற்று தொலைவில் அமைந்திருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி குறுகலான பாதையில் நடந்து, வீட்டு இரும்புக் கதவை திறந்து படிகளில் ஏறி வீட்டுக்குள் அவள் நுழைய வேண்டும். தலிபான்கள் திடீரென்று காரில் வந்து வீடுபுகுந்து தாக்குதல் நடத்த முடியாது. தலிபான்களின் மிரட்டல் காரணமாக அவள் திடீர் திடீரென்று தாக்குதல் கற்பனைக்கு செல்வாள். அனேகமாக தனது வீட்டு படிகளில் ஏறும்போதுதான் தலிபான்கள் தன்னை தாக்கக்கூடும் என்று கற்பனை செய்வாள். அப்படி அவர்கள் தாக்கும்போது, அதிகபட்சமாக தனது ஷூவைக் கழற்றி அவர்களை நோக்கி எறியத்தான் முடியும் என்று நினைப்பாள். உடனே, அவர்களைப் போல தானும் வன்முறையைக் கையாளக்கூடாது என்று அந்த நினைப்பை அழிப்பாள்.
“என்னைச் சுட வேண்டும். அதுதானே உங்கள் நோக்கம். சரி சுட்டுக்கொள்ளுங்கள். அதற்கு முன் நான் சொல்வதை கேளுங்கள். நீங்கள் செய்துகொண்டிருப்பது தவறு. உங்களுடன் எனக்கு தனிப்பட்ட விரோதமில்லை. எல்லா பெண் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்”
தலிபான்களிடம் இப்படி பேசுவதாய் கற்பனை செய்வாள். அவளுக்கு தலிபான்களை நினைத்து அச்சமில்லை என்றாலும், தினமும் வெளிக்கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்வாள். எல்லாவற்றையும் தனது தோழி மோனிபாவிடம் சொல்வாள். இருவரும் தவழும்போதிருந்தே பிரண்ட்ஸ். அவளுக்கு ஃபேஷன் டிசைனராக ஆக வேண்டும் என்று விருப்பம். தனது பெற்றோர் இதை ஏற்க மாட்டார்கள் என்பதால், டாக்டராக வேண்டும் என்று சொல்வாள். “ஒருவேளை தங்களை தலிபான்கள் தாக்கினால்?” என்று மோனிபா கேட்பாள். “கவலைப்படாதே, நம்மைப்போன்ற சிறுமிகளிடம் தலிபான்கள் நிச்சயமாக வரமாட்டார்கள்” என்று மலாலா தைரியம் சொல்வாள்.
பள்ளித்தேர்வு மதியம் முடிந்தது. பேருந்து அழைத்தது. மலாலாவும் அவளுடன் செல்லும் குழந்தைகளும் பஸ்ஸுக்கு வந்தார்கள். அது ஒரு டொயோட்டா பஸ். மலாலா தனது தோழி மோனிபாவுக்கும் தன்னைவிட ஒரு வயது குறைவான ஷாஸியா ரம்ஸானுக்கும் இடையில் அமர்ந்தாள். மொத்தம் 20 சிறுமிகளும் மூன்று ஆசிரியர்களும் பஸ்ஸில் இருந்தார்கள். தேர்வு எழுதும் அட்டைகளை அணைத்தபடியும், கால்களுக்கு அடியில் பள்ளிக்கூட பையுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
பஸ்ஸுக்குள் உஷ்ணமாக இருந்தது, ஜன்னல் வழியே வெளியே பார்க்க முடியாத அளவுக்கு அழுக்கு படிந்திருந்தது. தூரத்தில் இருந்த பனிபடர்ந்த ஹிந்துகுஷ் மலையை தெளிவாக பார்க்க முடியவில்லை. நீலவானம் மட்டும் லேசாக தெரிந்தது. சாலையிலிருந்த ராணுவ செக் பாய்ண்ட்டிலிருந்து வலதுபக்கம் பஸ் திரும்பியது அவளுக்கு நினைவிருக்கிறது. அங்கிருந்து 200 மீட்டர் தூரம் சென்றபோது, பஸ்ஸை ஒரு இளைஞன் நிறுத்தினான்.
“இது குஷால் பள்ளிப் பேருந்தா?” என்று டிரைவரிடம் கேட்டான். பள்ளியின் பெயர் பஸ்ஸில் எழுதியிருக்கும் நிலையில் அவனுடைய கேள்வி முட்டாள்தனமாகப்பட்டது. இருந்தாலும், “ஆம்” என்றார் டிரைவர்.
“சில மாணவிகளைப் பற்றி விவரம் தெரிய வேண்டும்” என்றான் இளைஞன்.
“தேவையென்றால் பள்ளியில் வந்து விசாரியுங்கள்” என்றார் டிரைவர். இதற்குள், மலாலா அருகிலிருந்த மோனிபா, யாரோ சில பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னாள். இதற்கு முன், பத்திரிகையாளர்களும், வெளிநாட்டினரும் மலாலாவையும் அவளுடைய தந்தையையும் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், இப்படி பஸ்ஸை நிறுத்தி யாரும் விசாரித்ததில்லை. மலாலாவுக்கு ஏதோ தவறாக பட்டது. அப்போது, அந்த இளைஞனுக்குப் பின்னால் மற்றொருவன் வந்தான். அவன் பஸ்ஸில் ஏறினான்.
“இதில் யார் மலாலா?” என்றான். யாரும் பதில் பேசவில்லை. “பதில் பேசாவிட்டால் எல்லோரையும் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டினான். எல்லோருடைய கண்களும் மலாலாவை நோக்கி திரும்பியிருந்தன. பஸ்ஸில் இருந்தவர்களில் அவள் மட்டுமே முகத்தை மூடாமல் இருந்தாள். இதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவன் தனது துப்பாக்கியை எடுத்து சுடத்தொடங்கினான். முதல் குண்டு மலாலாவின் கண்ணை ஒட்டி தலைக்குள் பாய்ந்தது. மற்ற சில குண்டுகள் குறி தவறின. அவை மலாலாவின் இருபுறமும் அமர்ந்திருந்த சிறுமிகள் மீது பாய்ந்தன. மலாலாவின் நீண்ட முடியும், மோனிபாவின் மடியும் ரத்தத்தால் நனைந்திருந்தது. சுட்டவனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததால் குறி தவறியிருந்தது. பள்ளி செல்லும் சிறுமியை தலிபான் தீவிரவாதிகள் ஈவிரக்கமின்றி கொல்லும் அளவுக்கு மலாலா செய்த தவறு என்ன? யார் இந்த மலாலா? மலாலாவின் கதையை அடுத்துவரும் பகுதிகளில் படிக்கலாம்…