Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #31

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

maayapura part 31

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமா  அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் இருக்கிறது என்று அசோக் சொன்னதும் சங்கவி அதிர்ந்தாள். என்ன சிக்கலாக இருக்கும் என யோசித்தாள். "என்ன மாமா சொல்றீங்க?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் சங்கவி.

"ஏய்  சங்கவி ஏன் பயப்படுற அமைதியாக இரு" என்று சங்கவியை அமைதிப்படுத்தினான்.

"ரமா அம்மாவை அழைத்துச் சென்றாள்  அத்தையும் மாமாவும் கோபப்படுவார்கள். போதாததற்கு புவனா வேறு  அத்தையை தூண்டி  விடுவாங்கன்னு சொல்றீங்களா மாமா"என்று தன் யோசனையைச் சொன்னாள் சங்கவி. 

"அவர்களை சமாளிப்பது பெரிய விஷயம் இல்லை.ஏதாவது பொய் சொல்ல வேண்டியதுதான். நல்ல விஷயத்திற்கு பொய் சொல்றது தப்பு இல்லைன்னு வள்ளுவரே சொல்லியிருக்கிறார்" என்று சாட்சிக்கு வள்ளுவரை அழைத்தான் அசோக். முதல் பிரச்சனை ரமா அம்மா கேன்சர் நோயாளி  என்றும் அவர்கள் வாழ்வின் விளிம்பில் இருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியவேண்டாம்.ஒருவர் பிறர் மீது காட்டும் அன்பு இயல்பாக வர வேண்டுமே தவிர இரக்கத்தின் காரணமாக வரக்கூடாது. அதனால் வீட்டில் எல்லாரிடமும் ரமா அம்மா என் நண்பனின் அம்மா என்றும் அம்மா ஒரு வாரம் அமைதிக்காக கிராமத்தில் தங்க வந்திருக்காங்கன்னு சொல்லுவோம்"என்று திட்டம் போட்டான் அசோக்.

"ஏன் மாமா நீங்க படிச்சது உங்க கிராமத்தில் தானே? அப்புறம் எப்படி வீட்டிற்கு தெரியாமல் நட்பு இருக்கும்" என்று புத்திசாலி என்ற நினைப்புடன் கேட்டாள் சங்கவி.

"அறிவே நான் பியூசி டவுனில் ஹாஸ்டலில்தானே தங்கிப் படித்தேன். அந்த சமயத்தில் இருந்த நட்பு வீட்டிற்கு தெரியாது. அதை பற்றி சொல்வேன் என்று ஒரு முடிவுடன் சொன்னான் அசோக். "சரிங்க மாமா ஒரு பிரச்சனை முடிந்தது. இன்னொரு பிரச்சனை என்ன மாமா? என்று ஆர்வமாக கேட்டாள் சங்கவி. "நம்ம வீட்டில் ஆளுக்கு ஒரு அறை தான் இருக்கு. ரமா அம்மாவை எங்கு தங்க வைப்பது?" என்று அசோக் தயக்கமாக சொன்னான். 

"ஆமாம் மாமா  நம்ம அறையை கொடுப்போம்" என்று தியாகியாக சொன்னாள் சங்கவி. 

"என்னது நாம கொடுப்பது அறையா... என்னவோ போனா போகுதுன்னு தட்டு முட்டு சாமான் எல்லாம் ஒதுங்கி நமக்கு கொஞ்சம் இடம் விட்டு வச்சிருக்கு" என்று கிண்டலாக சொன்னான் அசோக்.

"முதல்ல ஒரு பிரச்சினையை முடிப்போம். ரமா  அம்மாவை நல்லபடியா வீட்டில் தங்க வைப்போம். பிறகு அவர்கள் தங்கும் வசதியைப் பற்றி பேசுவோம்". என்றான் அசோக். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ரமாவை பார்ப்பதற்கு வக்கீலும், பத்திரம் எழுதுபவரும், ரிஜிஸ்டாரும் வந்தார்கள். அனைவரையும் வணக்கம் சொல்லி வரவேற்றார் ரமா. எப்படி பத்திரம் எழுத வேண்டும் என்று விளக்கினார் ரமா.தன்னுடைய  எதிர்கால திட்டத்தைப்  பற்றி விரிவாக கூறினார். இதை கேட்டதும் வக்கீலும், ரிஜிஸ்டாரும் மகிழ்ந்தனர். பத்திரம் எழுதுபவர் ரமா சொன்னவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டார். அங்கேயே பத்திரம் எழுதப்பட்டது. ஒருமுறை அனைத்தையும் படித்து சரி பார்த்தார் ரமா. "அம்மா மகனிடம் கேட்டீங்களா எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராதே" என்று வக்கீல் சந்தேகத்துடன் கேட்டார்.

"நேற்று இரவு மகனிடம் பேசிட்டேன் அவனுக்கு இதில் பரிபூரண சம்மதம்" என்று மகிழ்வுடன் கூறினார் ரமா.

"சார் அவசரப்பட்டு ரிஜிஸ்டர் பண்ண வேண்டாம்.ஒரு மாதம் கழித்து ஃபோன் பண்றேன் அப்ப ரிஜிஸ்டர் பண்ணுங்க" என்று வேண்டுகோள் வைத்தார் ரமா. மருத்துவமனை நடைமுறை எல்லாம் முடித்துவிட்டு மாலை நேரத்தில் கிராமத்திற்கு கிளம்பினார்கள். இருட்டிய பிறகு ஊருக்குள் வர வேண்டும். அப்பதான் யார் கண்ணிலும் படாமல் வரலாமென்று தங்கத்தின் உத்தரவு. அதனால் மாலை நேரத்தில் கிளம்பினான் அசோக். காரின் முன் இருக்கையில் ரமா வசதியாக அமர்ந்து கொண்டார். பின்னிருக்கையில் மல்லிகாவின் தலையை சங்கவி மடிமீது வைத்துக் கொள்ள படுத்துக் கொண்டு வந்தாள் மல்லிகா. அசோக் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான். சென்னையை விட்டு கார் வெளியே வந்தது. ஆளரவமற்ற அமைதியான சூழலில் தூரமாக தெரியும் கானல் நீரில் குளித்து எழுந்த சக்கரங்களைத் தார் சாலைகள் தலைதுவட்டிக் கொண்டிருந்தன. வானின் ஏதோ ஒரு மூலையில் நிலவினை பார்த்த சூரியன் வெட்கத்தில் மஞ்சளை பூசிக் கொண்டு ஓடி ஒளிந்தது. அந்த மாலைப்பொழுது ரமாவிற்கு ரம்மியமாக இருந்தது.

 

ஜன்னல் வழியாக வானத்தை பார்த்தார் ரமா. வானத்தில் கருமேகங்களைப் பார்த்ததும் கவிஞராக இருந்தால் பெண்கள் கூந்தலுக்கு உவமை சொல்லியிருப்பார்கள். ரமாவுக்கு படிக்க விரித்த புத்தகங்கள் காற்றில் அசைந்து ஆடுவது போல இருந்தது. அடுக்கிய புத்தகங்கள் கலைந்து சிதறியது போல ரமாவிற்கு காட்சி அளித்தது. ஒன்றையொன்று தூரத்தில் துரத்திய மேகங்கள் சிறிது சிறிதாக கலைந்து மறைந்தது.  மனிதனும் அப்படித்தான் துரத்தும் எண்ணங்களுடனும் மறையும் கனவுகளுடனும் காலத்தைக் கடக்கிறான் என நினைத்துக்கொண்டார் ரமா.    

 

மனிதனின் பலமும் பலவீனமும் நம்பிக்கைதான். பத்து நாட்கள் மட்டுமே பார்த்து பழகிய சங்கவியை நம்பி ரமா அவளுடன் அவள் வீட்டிற்கு செல்வது அவரின் அன்பின் பலமா? அறிவின் பலமா? என்பது ரமா மட்டுமே அறிந்த உண்மை. ரமா போட்டுள்ள திட்டங்கள் நிச்சயம் செயலுக்கு வரும் என்பதை ரமாவின் மனம் நம்பியது.

 

இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மல்லிகாவை மெதுவாக காரில் இருந்து இறங்க சொன்னார்கள். தங்கம் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தாள். அனைவரும் மல்லிகாவை நலம் விசாரித்தனர்.

 

மணி மல்லிகாவின் அருகில் வந்து கைகளை பற்றிக்கொண்டான். "எனக்கு ஒன்றும் இல்லை மாமா. நான் நல்லா இருக்கேன்" என்று மணிக்கு தைரியம் சொன்னாள் மல்லிகா. தனம்மா பாட்டி கிட்ட வந்து மல்லிகாவின் கன்னத்தில் தடவி நெட்டி முறித்தாள்.

"வேலங்காட்டில் விறகு வெட்டி, கலாக்காட்டில் காய்பறிச்சு, பனங்காட்டில் புள்ளை பெத்தாளாம் பொன்னாத்தா, பஞ்சு மெத்தையில் படுத்து பூமி அதிராமல் பதுவுசா நடந்து புள்ள பெத்தாளாம் கண்ணாத்தா என்கிற கதையா இவ என்னடான்னா நடக்கக் கூட கூடாதாமே" என்று அங்கலாய்த்தார் தனம்மா பாட்டி. 

"பாட்டி கொஞ்சம் வாயை மூடு" என்று கத்தினான் மணி. இவ்வளவு கலவரத்திலும் அங்கே ஒரு ஜீவன் நிற்பதை யாரும் கவனிக்கவில்லை. புவனா தான் பார்த்துவிட்டு "யாருங்க நீங்க" என்று கேட்டாள். 

 

அசோக் முந்திக்கொண்டு பதற்றமாக "என் ஃப்ரண்டு கணேஷோட  அம்மா" என்றான். "கணேசன்னு உனக்கு ஃபிரண்டே இல்லையேடா" என்று தங்கம் சந்தேகத்தை எழுப்பினாள். "இந்த ஊரில் இல்லை நான் பி.யு.சி ஹாஸ்டலில் தங்கிப் படிச்சேனே அப்ப இருந்த நண்பன் மா" என்று யோசித்து வைத்திருந்த பொய்யைத் தெளிவாக சொன்னான். அசோக் பேச பேச ரமா என்ன நடக்குதுன்னு புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார். "சரிடா இந்த நேரத்தில் நம்ம வீட்டுக்கு ஏண்டா வந்திருக்காங்க" என்று தங்கம் சற்றே பெரிதான குரலில் கேட்டார். 

"அம்மா நம்ம கூட சும்மா ஒரு வாரம் இங்க தங்கட்டும்" என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.

"அசோக் ஏன்டா அவங்க  இங்க தங்கணும் அவங்க வீட்டில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டாள் தங்கம். 

"அதெல்லாம் இல்லை மா அவங்க அமைதியான கிராமத்தில் தங்கனும்னு ஆசை பட்டாங்க அதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கேன்னு" முழம் முழமாக அளந்தான் அசோக்.

"அப்ப சரி தங்கட்டும்" என்று சொன்னாள் தங்கம்.

"வரவர இந்த வீடு சத்திரமாக மாறிடுச்சு" என்று புலம்பினான் மணி.

"ஆமாம்..  மாமா" என்று ஒத்து ஊதினாள் புவனா. வெளியே சென்றிருந்த செல்வம் உள்ளே நுழைந்து மருமகள் மல்லிகாவை நலம் விசாரித்தார். அசோக் ரமா அம்மாவை பற்றி செல்வத்திடம் சொன்னான்.

"ஓ ..தாராளமாக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இங்க இருக்கட்டும். வீடு தேடி வந்தவர்களை கிராமத்து மக்கள் எப்பவும்  உபசரிப்பார்கள்" என்று கனிவாக பேசினார் செல்வம்.  

 

உங்க எல்லோருடைய அன்புக்கு நன்றிங்க என் பெயர் ரமா என் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணமடைந்தார். மகனும் மருமகளும் பேரனும் ராணுவத்தில் தான் இருக்காங்க என்று ரமா பேசவும் அனைவரும்  ஆச்சரியமாக ரமாவையே பார்த்தனர். ஓரக்கண்ணால அசோக்கையும் பார்த்தனர்."போச்சுடா ஏற்கனவே நாம நேர்ந்து விட்ட பலி ஆடுமாதிரி தான் இருக்கோம்.இப்ப இவங்களுக்கு இருக்கும் கோபத்திற்கு நம்மளை கெடா வெட்டி விருந்து வச்சிடுவாங்க போலிருக்கேன்னு" நினைத்தான் அசோக்.

"நான் மட்டும்தான் சென்னையில் இருக்கேன். மல்லிகாவை சேர்த்து இருந்த மருத்துவமனையில் தான் நானும் கேன்சர் நோய்க்காக தங்கியிருந்தேன்.  அப்பதான் சங்கவியைப் பார்த்தேன். அம்மா... அம்மா என்று  என் மேல ரொம்ப அன்பா இருந்தா. அவளும் அசோக்கும் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாங்க கொஞ்ச நாளாவது குடும்பம் என்ற உறவுகளுடன் இருக்க ஆசையா இருந்தது. அதான் வந்தேன் உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் நான் சென்னைக்கே போயிடறேன்னு" சொன்னதும், ரமாவின் பைகளை எடுத்துச் சென்று உள்ளே வைத்தான் மணி. "அத்தை என்னை மன்னிச்சிடுங்க நான் திட்டுவாங்க கூடாதுன்னு மாமா பொய் சொல்லிட்டார்" என்று மன்னிப்பு  கேட்டாள் சங்கவி. "ரமா அம்மா ரொம்ப அன்பானவங்க, அவங்க கொஞ்ச நாள் நம்ம கூடவே இருக்கட்டுமே அத்தை" என்று கேட்டாள் மல்லிகா.

"பாவம் குழந்தைங்க என் மேல இருக்கும் அன்பால எனக்கு உதவி செய்வதற்காக பொய் சொல்லிட்டாங்க நானும் அவங்களோட சேர்ந்து பொய் சொன்னால் மரியாதை இருக்காது". என்று கண்ணியமாக பேசினார் ரமா. இரவு உணவு முடித்துவிட்டு அனைவரும் கூடத்தில் படுத்தனர். தனம்மா பாட்டிதான் ரமாவிடம்  கேள்வியாக கேட்டு ராக்கெட் விட்டுக்கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து வயல் வேலைக்கு செல்வதற்காக அசோக் கிளம்பிக் கொண்டிருந்தான். உடன் எழுந்த ரமாவும் அசோக் உடன் சிறிது தூரம் வருவதாக அடம்பிடித்தார்.

 

எனவே அசோக் அழைத்துச்சென்றான் மெதுவாக தான் நடந்து சென்றாள்  நாம் போகும்போது தனிமையில் அசோக்கிடம் சில விஷயங்களை பேசிக் கொண்டே சென்றார்.  அதை கேட்டதும் அசோக் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 


 

சார்ந்த செய்திகள்