Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #14

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

maayapura part 14

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

’நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது உன் கையிலுள்ள வீணை. இந்த நொடியில் வாழப் பழகினால் வாழ்க்கை இன்பமாக இருக்கும்’- என்று எங்கோ படித்தது நினைவுக்கு வர இதுவரை நடந்த கலவரங்களில் இருந்து விடுபட்டு புதுப்பெண் போல் சங்கவியின்  முகம் நாணத்தில் சிவந்தது.

 

சந்தனமும் குங்குமமும் சேர்த்துக் குழைத்த  கலவையாக அவள் கன்னம் மின்னியது. அசோக்கின் அக்கா குழந்தைகளான நந்தினியும், கதிரும் அவளின் மகிழ்ச்சிக்கு, மேலும் அத்தர் அடித்துக்கொண்டு இருந்தார்கள். 

 

சங்கவிக்கும் அசோக்குக்கும் கனவாக இருந்த அந்த மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு.. இப்போது நனவாகிக்கொண்டு இருந்தது.  அனைவரின் வாழ்த்துகளுக்கும் நடுவில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.

 

சங்கவியின் விழியோரம், ஆனந்தம் கண்ணீர் மொழியில் மங்கலக் கவிதை எழுதியது.

"ஏன் மாலையை மாற்றி மாற்றிப் போடுகிறார்கள்" என்று நந்தினி அப்பாவியாகக் கேட்டாள். இது புரோகிதார் காதில் விழுந்தது. "குழந்தே, மாலையை மாற்றும்போது, இனி என் சகலமும் உனக்கு. உன் சகலமும் எனக்குன்னு சொல்ற மாதிரி இது. அதற்கான அடையாளமாத்தான் இவா, மாலையை மாத்திக்கறாள்" என்றார் அவர்.

 

புரோகிதர்  பேச ஆரம்பித்ததும், அவர் அருகில் அமர்ந்துகொண்டு, "அப்ப எதற்கு இந்த குச்சியை நெருப்பில் போட்டு கொளுத்தறீங்க?  எங்க கண்ணெல்லாம் எரியுதே?” என்று சொன்னான் துடுக்கன் கதிர். 


"இந்த குச்சிகள் மரத்தில் இருந்து வந்தவை. மரம் மண்ணில் இருந்து வந்தது. பஞ்ச பூதங்களில் நிலமும்  ஒன்று. இதில் ஊற்றக் கூடிய  நெய்,  நீரைப் போன்றது. இந்த நெருப்பு எரிவதற்கு காற்று தேவைப்படுகிறது. எரிகின்ற நெருப்பு ஆகாயம்.  ஆக இந்த பஞ்ச பூதங்களாகிய இயற்கையை சாட்சியாக வைத்து நாம் ஒன்றாக வாழ்வோம் என்பதை சொல்வதற்காகத் தான், இந்த வேள்விக்குண்டத்த வைக்கிறோம்” என்றார்,  தனக்குத் தெரிந்தவாறு.

 

அப்போதும் விடாமல், "அப்புறம் எதற்கு சட்னி அரைக்கிற அம்மியைக் கொண்டு வந்து, இங்கே போட்டிருக்கீங்க?" என்று ஆர்வமாய்க் கேட்டாள் நந்தினி.

"அம்மி கல்லு தானே? அதற்கு அடித்தால் வலிக்குமோ ?அதுமாதிரி குடும்பம் என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். கணவன் மனைவி இருவரும் கல்லு மாதிரி உறுதியாக இருந்து அந்த பிரச்சனைகளை சமாளிக்க வேண்டும். அதோட வாழ்க்கையில் எத்தனைதான் அரைபட்டாலும் ஒருவரோடு ஒருவர் ஒன்று  கலந்து மைபோல் ஆகனும்ன்னு உணர்த்தறதுக்குதான் இந்த அம்மி” என்று அதற்கும் விளக்கம் சொன்னார் புரோகிதர். 

இதையெல்லாம், அத்தனை பேரும் ஆர்வமாகக் கவனித்தனர். அப்போது...

"அது சரி என்னிடம் எதற்கு, அருந்ததி தெரியுதா பாருன்னு சொன்னீங்க?" என்று ஆர்வமிகுதியால் குழந்தையானாள் சங்கவி .

"அம்மாடி வானத்தில் வடகிழக்கு மூலையில் அதிகாலை நான்கு மணிக்கு ஒரு நட்சத்திரக் கூட்டம் கண்ணுக்குத் தெரியும். அதன் பிறகு மறைந்து விடும் .அந்த நட்சத்திரத்திற்கு நம் முன்னோர்கள் அருந்ததி என்று பெயர் வச்சிருக்கா.  ஆணும் பெண்ணும் அதிகாலையில் எழுந்து உழைத்தால்தான் குடும்பம் வளமாக இருக்கும். இதை குறிப்பால் உணர்த்தவே அருந்ததியை பார்க்கணும்ன்னு சொல்றா” என்று அதற்கும் விளக்கம் கொடுத்தார்.

"எதுக்கு இந்த கிளையை கொண்டு வந்து இங்கு கட்டி வச்சு இருக்கீங்க?" என்று அரச மரக் கிளையை காட்டினாள் நந்தினி. 

"இது அரசமரம். நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது. மற்ற மரங்களை விட அரச மரத்தில்தான் ஆக்ஸிஜன் வாயு அதிக அளவில் வெளிப்படும். அதனால்தான் பல ஆண்டுகள் வாழ்ந்து குடும்பம் விருத்தி ஆகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் போல் நன்மை செய்யவேண்டும் என்றும் நம் முன்னோர்கள் இந்த சடங்கை எல்லாம் செய்தார்கள். காலப்போக்கில் இது மதம் சார்ந்து திணிக்கப்பட்டு விட்டது" என்று சந்தடி சாக்கில் அறிவியலையும் கலந்துவிட்டார் புரோகிதார். 

 

எல்லா சடங்குகளும் முடிந்ததும், மணவீட்டில் கிடைத்த  பொருட்கள் அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு புரோகிதர் உற்சாகமாகக் கிளம்பினார்.

 

பொதுவெளி என்பதால் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை வெளியே காட்டாமல் இருந்தாலும், அசோக்கின்  குடும்பத்தினர் அந்தப் புழுக்கத்தை  மனதில் வைத்துக்கொண்டு பிறரிடம் வெடித்துக் கொண்டிருந்தனர். பெற்றோர்களுக்கு உச்சகட்ட மகிழ்வே, தங்கள்  மகளை ஒரு நல்லவன் கையில் பிடித்துக் கொடுப்பது தான். 

 

சங்கவிக்கு திருமணம் திடீரென்று நடந்தாலும், மாப்பிள்ளை அசோக் தன் பெண்ணை கண் போலப் பார்த்துக்கொள்வான் என்ற மகிழ்ச்சியில் அவர்கள் மனம் நிம்மதியானாலும்,  மத்தவங்க இனி என்னவெல்லாம் சொல்லப் போறாங்களோ? என்ற எண்ணத்தில் திக்கித் திணறியது. அந்த உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் சங்கவியின் பெற்றோர்.. 

"என்னப்பா செல்வம், ஒரு கல்யாண செலவிலேயே 2 கல்யாணத்தையும் முடிச்சிட்டியே, பெரிய ஆளுதான் பா நீ " என்று கலாய்த்தார்  அவரது கூட்டாளி முருகன்.

" மச்சான், வயித்தெரிச்சலைக்  கிளப்பாதீங்க. வரவேண்டிய மொய்ப் பணமும் சீரும் போச்சேன்னு கடுப்புல இருக்கேன்.  சொந்தக்கார பயலுக்கெல்லாம் நிறைய சீர்செய்து இருக்கேன். ரெண்டு பிள்ளைங்க அப்படிங்கறதால... அடுத்த கல்யாணத்துல செய்துக்கலாம்னு எல்லாரும் கொஞ்சமாத்தான் இப்ப செய்திருக்காங்க" என்று மொய் வரவை எண்ணிப் புலம்பினார் செல்வம்.

"விடுப்பா, சீருவாரெல்லாம் வட்டி இல்லா கடன் தானே. அதுக்குப் போயி பெரிசா கவலைப்பட்டுக்கிட்டு" என்று ஆறுதல் சொல்லிவிட்டு "நாட்டில், அவனவன் கவலை அவனவனுக்கு" என்று சொல்லிக்கொண்டே போனார் முருகன்.

 

இரண்டு ஜோடிகளையும் வீட்டு வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள். தங்கம், தன் முகத்தை பரண் மீது தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். மூத்த மருமகள் மல்லிகாவை "வாம்மா மவராசி. எங்க குலம் விருத்தி அடைந்து பொன்  பொருளெல்லாம் பெருகணும்னு குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, விளக்கேத்து மா” அன்போடு அழைத்து விளக்கேற்ற வைத்தாள் தங்கம். அவர்களுடன் அசோக்கும் சங்கவியும் ஒரு ஓரமாக நின்றனர். மாப்பிள்ளை வீட்டில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முடிந்ததும், பெண் வீட்டிற்கு மூத்த மகனையும் மருமகளையும் காரில், மணியின் மாமனார் வீட்டிற்கு  அனுப்பி வைத்தனர்.

 

அசோக்கும் சங்கவியும் பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடந்து கொள்ளலாம் என்று காத்திருந்தனர் .

"வீட்டைக் காக்க வந்த குல சாமி, சாதி  சனம் பார்க்க பல்லக்கில் போச்சுதாம் ஊர்வலமாய். வீட்டு வாசலில் இருந்த நாய், விக்கி விக்கி நடந்து கூடவே ஓடுச்சாம் ஊர்வலமாய்" ங்கற கதையா, பெருமாள் நீயேன்  தூணைப்  பிடிச்சுகிட்டு நிக்கிற. உன் பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிகிட்டு இப்பவே நடந்தால் தானே பொழுது சாயறதுகுள்ள ஊர் போய் சேர முடியும்" என்று கிண்டலாகச் சொன்னாள் தனம் பாட்டி.

"பாட்டி, கொஞ்சம்  நாக்க அடக்கு. நாங்க ஏன் நடந்து போறோம். காரை விடப் பெரிய வண்டியில் போக போறோம்" என்று அசோக்கும் தனம்மாவைக் கடுப்பேத்தினான்.

"அது என்ன பெரிய வண்டி கட்ட வண்டி தானே" என்று இழுத்தாள் தனம் "இல்ல பாட்டி, அரசாங்க பஸ்ல தான்" என்று பாட்டியின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்தான் அசோக்.

"ஏழூரு  சீமையிலே இல்லாத இளவரசியை கல்யாணம்  பண்ண மாதிரி, மாமனார் வீட்டை விட்டுக் கொடுக்காம பேசுற, நீயே தலையில வச்சுக் கொண்டாடு. மறுவீடு முடிச்சு வெறுங்கையோட வராத. உன் பொண்டாட்டியச் சீர் செனத்தி  எல்லாம் எடுத்துட்டு வரச்சொல்லு" என்று அதிகாரமாகச் சொன்னாள் அடங்காத தனம் பாட்டி.

"பாட்டி என்ன சொல்ற" என்று அதிர்ந்தான் அசோக். "அம்மா, திடீரென கேட்டால்  நாங்க என்ன பண்ணுவோம் கொஞ்சம் கொஞ்சமா செய்யறோம்" என்று கெஞ்சலாகச் சொன்னார் சங்கவியின் அப்பா பெருமாள்.

" என் அண்ணன் பொண்ணை கல்யாணம் பண்ணி இருந்தால், 50 பவுன் நகை போட்டு, வீடு நிறைய சீர் செனத்தி நிறைந்திருக்கும். என் ஆசையில  மண்ணப் போட்டுட்டான் அசோக். என் மகன் அந்த அளவு இல்லைனாலும் அதுல பாதியாவது உங்க பொண்ணுக்கு செய்து அனுப்புங்க. அப்பதான் எனக்கு கௌரவம்" என்று அவள் பங்குக்குத் தீ மூட்டினாள் தங்கம் .

"அட ...ஏம்மா தங்கம், காதுல மூக்குல போடுவதற்கு தாளம் போடறவன் பெருமாள். அவன் எப்படி என் அளவுக்கு சீர் செனத்தி செய்வான்?" என்று வார்த்தையால் அம்பு விட்டார் கண்ணுசாமி. 

 

இதைக் கேட்டு பெருமாளும் அலமேலுவும் கூனிக்குறுகி  நின்றனர். அசோக் யோசிக்காமல் செய்த காரியத்தால் தன் அப்பா அம்மா தலைகுனிந்து நிற்கிறார்களே  என்று மனதுக்குள் துடித்தாள் சங்கவி. இயலாமையுடனும், கோபத்துடனும் அசோக்கைப் பார்த்தாள் சங்கவி.

 

அசோக் ஏதோ முடிவுக்கு வந்தவனாக "வாங்க போகலாம் இனிமே இங்கே இருக்கவேண்டாம்" என்று சங்கவியின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். பெருமாளும் அலமேலுவும் அவர்களுடன் நடந்தார்கள்.

"அசோக் போற போக்கைப்  பார்த்தால் திரும்பி வரமாட்டான் போலிருக்கு. என் மகள் வாழ முடியாத வீட்டில், வேறு யாரும் வாழக்கூடாது, என்று’ மனதிற்குள் பொருமினார்  கண்ணுசாமி.

 

அந்த வீட்டை விட்டு வெளியே அசோக்குடன் கால் வைத்த சங்கவி, ஒரு புதிய சுதந்திரக் காற்றை சுவாசித்தாள்.  உலகம் வெளியே அழகாக இருந்தது. 

 

’வாருங்கள் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்’ என்பது போல், பறவைகள் தலைக்கு மேல் வட்டமடித்துப் பறந்தன.

 

ஆனால், பெருமாளும் அலமேலுவும் தீ மீது நடப்பது போல், கனத்த இதயத்துடன் நடந்தனர். பஸ் ஸ்டாப்பை நோக்கி.

 

(சிறகுகள் படபடக்கும்)