வெளிநாட்டு மாப்பிள்ளையால் ஏமாற்றப்பட்ட பெண் வழக்கு குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் விவரிக்கிறார்
சமீப காலங்களில் வெளிநாடு சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகம் வருகின்றன. அனைத்து விதமான சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து, வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு இங்கிருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். சில காலம் கழித்து பெண்ணையும் அங்கு அழைத்துச் செல்வதாக பையன் தெரிவித்தான். ஆனால், நீண்ட காலமாகியும் அந்தப் பெண்ணை அவன் அழைக்கவே இல்லை. ஒரு வருட காலம் கடந்ததால் அந்தப் பெண் நம்மிடம் வந்தார். தான் சார்ந்த வேலைகள் அந்த நாட்டில் நிறைய இருந்தாலும், கணவர் இன்னும் தன்னை அழைக்கவில்லை என்றார்.
ஆனால் போனில் அந்தப் பையன் அவளுடன் தினமும் பேசி வந்தார். அவ்வப்போது பணமும் அனுப்பி வந்தார். ஆனால் வெளிநாட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பையன் குறித்து அந்த நாட்டில் விசாரித்தபோது தான் தெரிந்தது, அவனுக்கு ஏற்கனவே அங்கு திருமணமாகி குழந்தையும் இருந்த விஷயம். அதை மறைத்து தான் இங்கு அவன் பெற்றோர் மீதுள்ள பயத்தால் திருமணம் செய்துகொண்டான். பெண் வீட்டார் தரப்பில் சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாக கல்யாணத்தை நடத்தியதன் விளைவுதான் இது. இதுபோல் இப்போது நிறைய பேர் சுற்றி வருகின்றனர். அவன் செய்தது நிச்சயம் துரோகம் தான்.
இப்படியான வழக்குகள் இப்போது நிறைய வருகின்றன. இதேபோல் இந்தியாவில் இருக்கும் ஒரு ஆணுக்கு வெளிநாட்டில் இருக்கும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் ஒத்துவராமல் விவாகரத்து வரை சென்றது. அந்தப் பெண்ணை இந்தியா அழைத்து வர அவன் விரும்பவில்லை. அவன் வெளிநாடு சென்று செட்டிலாக வேண்டும் என்றுதான் நினைத்தான். அவன் மாடர்ன் டைப்பாக இருந்தான். பெண்ணின் தரப்பில் இந்திய கலாச்சாரத்தை அதிகம் விரும்பினர். அதனால் இருவருக்கும் ஒத்துவரவில்லை.
வெளிநாட்டு மாப்பிள்ளை, பெண் என்று செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். முழுமையாக விசாரிக்க வேண்டும். ஊருக்காக திருமணம் செய்து கொண்டு இன்னொருவரின் வாழ்க்கையை சீரழிப்பது தவறு. இப்படிப்பட்ட ஆட்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும். அனுசரித்து வாழுங்கள் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் அட்வைஸ் செய்யக்கூடாது.