பல்வேறு மனிதர்களின் கதைகளை நம்மோடு பகிர்ந்து வரும் ஜெய் ஜென் தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஒரு பெண்ணின் கதையை இப்போது நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
தன்பாலின ஈர்ப்பு என்பதும் ஒரு விதமான உணர்வு தான். அதற்காக யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஒரு கல்லூரி மாணவிக்கு இதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆண் மீது அவருக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. பெண்ணைப் பார்க்கும்போது அவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. தன்பாலின ஈர்ப்பு என்கிற இயல்பான ஒரு விஷயம் இன்னும் இந்த உலகத்துக்குப் புரியவில்லை. ஒரு ஆணுக்கு பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் பார்க்கும்போது வரும் அத்தனை உணர்வுகளும் இந்தப் பெண்ணுக்கு இன்னொரு பெண்ணைப் பார்க்கும்போது வந்தன.
ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது ஈர்ப்பு இருக்கும்போது அதை இந்த உலகம் அணுகும் விதம் தனக்கு பயத்தை அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற தன்பாலின ஈர்ப்பு கொண்ட மற்ற பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்படுகின்றனர். இது குறித்து சில மருத்துவர்களிடம் அந்தப் பெண் ஆலோசனை பெறச் சென்றபோது சில மருத்துவர்களுக்கே இது குறித்த முழுமையான புரிதல் இல்லை. தன்பாலின ஈர்ப்பு என்பது பெண்ணுக்கும் பெண்ணுக்குமான நட்பாகக் கூட இருக்கலாம். குடும்பத்திலும் இது குறித்து அந்தப் பெண் தெரிவித்துவிட்டார்.
நீ எப்படி வாழ்ந்தாலும், சமுதாயத்துக்கு நல்ல பெண்ணாக வாழும்வரை நீ எங்களுடைய பேத்தி தான் என்று அவருடைய தாத்தா சொன்னார். அந்தப் பெண் அவருடைய விருப்பப்படியே வாழலாம் என்று நானும் கூறினேன். உணர்வுகளோடு பயணித்து ஒருவரால் ஜெயிக்க முடியும். ஆனால் உணர்வுகளுக்கு எதிராகப் போராடி ஜெயிக்க முடியாது. தன்பாலின ஈர்ப்பு இருக்கும் ஒருவரை எதிர்பாலினத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்துவைப்பது தவறு. முதலில் இதை ஒரு உணர்வாக மனதுக்குள் அனைவரும் அங்கீகரிக்க வேண்டும்.
தன்பாலின ஈர்ப்பு இருப்பதால் நம்முடைய குழந்தை தவறானது என்கிற எண்ணத்துக்கு நாம் சென்றுவிடக் கூடாது. இதே உலகத்தில் அனைத்து விதமான வளர்ச்சிகளையும் அவர்களும் அடைவார்கள். இன்று உலகத்தில் பல உயரங்களை அடைந்தவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்கள். அவர்களுக்கே உணர்வு மாறி எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் சரி. இல்லையெனில் நாம் எதையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அனைவருக்குமான சுதந்திரம் இங்கு இருக்கிறது.