இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்
ஒவ்வொரு அத்தியாத்திற்குள் சுவாரஸ்யங்களை ஒளித்து வைத்துக் கொள்ளும் க்ரைம் புத்தகமாய் நகர்கிறது வாழ்க்கை. சிலநேரங்களில் அக்காகித கூர்மைகள் நம்மைக் கீறிப் பார்ப்பதுண்டு.
பாழடைந்த அந்தக் கட்டிடத்தின் உள்ளே அவன் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தான். சுற்றிலும் சிறு சிறு இடைவெளிவிட்டு மர அடுக்குகள். தோதாய் ஒளிந்திருந்து தாக்க வசமாய் திசைக்கொன்றாய், அதன் பின்னால் தன் உடலை குறுக்கி மறைத்திருந்தார்கள். அவர்களின் மார்போடு காதலியைப் போல இறுக அணைத்திருந்த துப்பாக்கிகள் எல்லாம் நவீன ரகமானவை. எத்தனை தூரமாய் இருந்தாலும் இலக்கை குறி வைப்பதில் வல்லமையானவை !
அந்த கட்டிடத்தை நோக்கி வந்தது ஒரு ஜீப். அதனில் இருந்து இறங்கிய ஆட்களின் கரங்களிலும் துப்பாக்கி தங்களுக்குள் அவர்கள் யூகம் வகுத்துக் கொண்டு இருந்த போதே, “ சடசடவென வெடிக்கும் சப்தங்கள் ஆங்காங்கே ரத்தத் தீற்றல்கள் உயிர் போகும் ரண அலறல்கள் !”.
வண்டியிலிருந்து சிதறி ஓடியவர்களில் அனைவரும் காலி, ஒருவனைத்தவிர. எஞ்சிய அவன் பய உணர்வுகளின் கடைசி படிகளில் நின்றபடியே சரணடைகிறேன் என்று இரு கைகளையும் தூக்கியபடி நிற்க, அக்கைகளை ஆசையோடு தழுவிக் கொண்டது எதிராளியின் துப்பாக்கிக் குண்டுகள். அவனின் மார்பு பிரதேசமும் அப்படியே பொத்தல்களாகி பெரும் ஓலத்தோடு பட்டு தெறித்த ரத்தத்துளிகள் ஒன்று சேர்ந்து ஸ்கீரினில் லெவல் - 2 இன் அழைப்பு தெரிந்தது.
“இன்ட்ரஸ்டிங் ?!” என்று பச்சைப் பட்டனை அழுத்திய விஷ்வா, பேஸ்கட் ஆப்ஷனுக்குச் சென்று புதிய கேரக்டர்களை வாங்கினான். 500 பாயிண்ட்ஸ் தந்து கூடவே லெவல் பூஸ்டர்களாக லைஃப்சேவர் இரண்டும் செல்போன் டவர் போன்று இணைந்து கொண்டதும் உற்சாகமானான் விஷ்வா.
அறைக்கதவு படீரென்று திறக்கப்பட கையில் பிடித்திருந்த மொபைலை ஓரம் வைத்து புத்தகத்தை எடுத்துக் கொண்டான். ஆயா உள்ளே தலையை நுழைத்தாள்.
“நீதானா ஆயா ?” “நான் கூட அம்மாவோன்னு பயந்திட்டேன். என்னை இப்போ டிஸ்டர்ப் பண்ணாதே ? எட்டு மணிக்கு வந்தா போதும். அதுவரைக்கும் போய் டிவி சீரியல் பாரு. உனக்குத்தான் டீவி போட்டுட்டு வந்தேனே ?” என்று பேசியவன் அவளின் பின்னால் ஏதோ நிழல் தெரிய மேகாவைப் பார்த்ததும் விழிகளை விரித்தான். அவன் கையில் இருந்த மொபைல் அடுத்த லெவல் போகச் சொல்லி எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தந்தது.
“அம்மா நீங்க எப்போ வந்தீங்க ?” என்று விஷ்வா கேட்கும் போதே, மேகா அவன் கரங்களில் இருந்து ஃபோனை பிடுங்கினாள்.
“இன்னைக்கு ஏன் ஸ்கூல் போகலை விஷ்வா ?”
“அது வந்து...." மகன் தயங்க....!?
“என்ன பொய் சொல்லலான்னு யோசிக்கிறியா ? நான் இப்போ நேரா உங்க ஸ்கூல்ல உன் HM-யைப் பார்த்திட்டுத்தான் வர்றேன்? “ விஷ்வா பதில் பேசுவதற்குள் ஆயா வாய் திறந்தாள்.
“அம்மா தம்பிக்கு காத்தாலே இருந்து ஒரே வவுத்துவலி. அதான் பள்ளிக்கூடம் போவலை. இப்பத்தான் எழுந்துச்சி ............! “
“வாயை மூடுங்க உங்களாலதான் அவன் இப்படிக் கெட்டுப்போறான். இன்னையோட சேர்த்து அவன் இந்த மாதத்திலே மட்டும் எட்டு நாளுக்கு மேல லீவு. எல்லாம் நான் புரோஜெக்ட் விஷயமா வெளியூர் போன நாட்கள். பதிமூணு வயசில பொய் சொல்லி ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு ? அவன் சின்னபையன் நீங்க கண்டிக்க வேண்டாமா ? அட்லீஸ்ட் எனக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருக்கலாமே ?!
“அட என்னம்மா நீ ! புள்ளையோட உடம்பை விடவும் படிப்பு முக்கியமா ? படுத்தே கிடந்த பிள்ளையை நான்தான் செத்த விளையாடுன்னு சொன்னேன். நைட்டு சமையல்ல கைவேலையா இருந்திட்டேன் அதான் நீ வந்ததைக் கூட கவனிக்கலை”!.
“நீங்க தொந்தரவு இல்லாம டிவி சீரியல் பார்க்க அவனை இப்படி பண்றீங்கல்ல. கிச்சன் காலியா இருக்கு சமைச்ச அறிகுறியே இல்லை. டஸ்பின்லே காலி பீஸா பாக்ஸ் இருக்கு. வாங்குற காசுக்கு கொஞ்சமாக உழைக்கவும் கத்துக்கோங்க ?. காலையிலே எட்டுமணியில் இருந்து இவன் விளையாடறான். ! “
“இன்னமா கதையா இருக்கு. நீ என்னவோ பக்கத்திலே இருந்து பார்த்தா மாதிரியில்லை சொல்றே?! “
“அவன் யூஸ் பண்றது என் மொபைல். செக் பண்ணா எல்லாம் தெரியும். மாசம் சொளையா பணம் வாங்குறீங்களே, எதுக்கு இப்படி அவனை பாழ் பண்ணத்தானா ? போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து மனுஷாளோட வம்பு வேற ?! “
“இந்தா பாரும்மா நீ கொடுக்கிற 10000 ரூபாக்காக நான் இங்கே வேலை பார்க்கலை. ஏற்கனவே அப்பங்கிடையாது. அம்மாகாரி நீயும் வூடு தங்கினது கிடையாது. அப்பப்போ வெளியூர் போயிடறே, இந்த பிள்ளை மேல மருந்துக்கும் பாசம் இருக்கா ?!. பிள்ளையைப் பெத்தா மட்டும் போதாது வளர்க்கவும் தெரியணும் ! “.
“ஷட்டப்... !” “ இனிமே ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்கக் கூடாது வெளியே போங்க ?!.
“நீயா சொன்னாலும் நான் இங்கே இருக்கப் போறதில்லை. பொம்பளை சம்பாரிச்சிட்டா இப்படியுமா கண்ணு மண்ணு தெரியாம கோவம் வரும்! இந்த வீடு இல்லைன்னா இன்னொரு வீடு! நீதான் இதோ இவனை வச்சிகிட்டு அல்லாடுவே ? எனக்கென்ன ? வர்றேன்டா கண்ணு. பார்த்து சூதானமா நடந்துக்கோ ?!” விஷ்வாவின் தலையை வருடிவிட்டு வராத கண்ணீரைச் சுண்டியபடி வெளியே போனாள் ஆயா.
“நீ ரொம்பவும் மோசம் மம்மி, ஐ ஹேட் யூ?! “ என்ற மகனின் பக்கம் திரும்பினாள் மேகா.
“விஷ்வா தப்பை நீ பண்ணிட்டு என்னை குற்றம் சொல்றீயா ? சொல்லு ஏன் லீவு போட்டே ?!”
“எனக்கு போக பிடிக்கலை. அங்கே நிறைய கட்டுப்பாடுகள். அது எனக்கு பிடிக்கலை?!”
“ஃபைனல் எக்ஸாம் நெருங்கிகிட்டு இருக்கு. இப்போ என்னாச்சு விஷ்வா உனக்கு? எப்போ பார்த்தாலும் இந்த கேம்ஸைக் கட்டிகிட்டு அழுவுறே ? “
“ஸோ வாட் ? எனக்கு இது பிடிச்சிருக்கு !” “இது என் பிரைவசி மா ! அதை நீங்க கெடுக்கறீங்க ? ஸ்கூல் போலைன்னா என்ன இப்போ ? லாஸ்ட் ரிவிஷன்லே கூட நான்தான் கிளாஸ் பர்ஸ்ட். என்னோட ரிப்போர்ட்டை காட்டும் போது கூட ஏதோ ஃபோன்ல பேசிகிட்டு அவசரமா கிறுக்கிட்டுப் போனதால உங்களுக்கு அது நினைவுயில்லாம இருக்கலாம். ஆயா சொன்னாமாதிரி நீங்க என்கூட எப்பவாவது டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்களா ? உங்களுக்கு என்னை விடவும் ஆபீஸ் வேலைதான் முக்கியம் ?!”
“அப்படியில்லை விஷ்வா நான் சம்பாரிக்கிறது எல்லாம் உன்னோட எதிர்காலத்துக்குத்தான். இன்னைக்கு உங்க HM உன்னைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டாங்க. நீ ஸ்கூலுக்கு வராதது எனக்கு தெரியாதுன்னு நான் சொல்லலை. பட் எனக்கு எவ்வளவு அவமானமா இருந்தது தெரியுமா ? “
“இதை இப்போதானே நீங்க உணர்றீங்க மம்மி ? ஒவ்வொரு பிள்ளைங்களையும் அவங்க அப்பா அம்மா வந்து டிராப் பண்றாங்க. சாப்பிட வைக்கிறாங்க. இன்னைக்கு கிளாஸ்லே என்னவெல்லாம் நடந்ததுன்னு கதை கேட்டு, சாக்லேட்டும் ஐஸ்கீரிமும் கேட்கும்போது வேணான்டான்னு அக்கறையா திட்டி பாசமா வாங்கித் தர்றாங்க! ஆனா நான் யாரோ ஒருத்தனோட வேன்லே போறேன் வர்றேன். லாஸ்ட் புரோகரஸ் வாங்க கூட நீங்க வரலை. கிளாஸ் ஃபர்ஸ்ட்ன்னு என்னை பிரேயர்லே வைச்சி எப்படி பாராட்டினாங்க தெரியுமா ?! நான் எப்படி மிஸ் பண்ணியிருப்பேன் ?! “
“ ஏன்டா உங்க அப்பாதான் உங்க கூட இல்லை அம்மா கூடவா வரக்கூடாதுன்னு என் பிரண்ட்ஸ் கேள்விக் கேட்கும் போது, நான் எத்தனை அவமானப்பட்டு இருப்பேன் ?!”
“விஷ்வா என் வேலை அப்படி ? ஒரு சிங்கிள் பேரண்ட்டோட கஷ்டம் உனக்குப் புரியாதுடா ?! அடிச்சி பிடிச்சி ஓடறது எல்லாம் உனக்காகத்தான் விஷ்வா !”
“புரியும்மா.... !” “என் பிரண்ட் ரவியோட அம்மா கூட உங்களை மாதிரிதான் பண்டிகை சமயத்திலே அவங்க வீட்டைப் பாருங்க. வெளியே வேண்டாம் அக்கம் பக்கத்து வீடுகள்ல கூட எல்லாரும் பேரண்ட்ஸ்ஸோட இருக்காங்க. அப்போ கூட நான் மட்டும் தனிதான். சீரியல் பார்த்துட்டு இருந்தாலும் தனிமையைப் போக்குற ஒரு ஜீவனா ஆயா என்கூட இருந்தாங்க. இனிமே அவங்களும் இல்லை. உனக்கு ஆபீஸ்லே நல்ல பெயர் பிரமோஷன் எல்லாம் வாங்கணும். யூ ஆர் ஏ செல்பிஷ் மம்மி. என்னோட எந்த சந்தோஷத்திலும் கஷ்டத்திலும் நீ இல்லை !”.
“விஷ்வா....?!”
“இந்த ஃபோன் எனக்கு என்னவெல்லாம் தருது தெரியுமா ? என்னோட தனிமையைப் போக்குது. நான் கேட்கிற சந்தோஷத்தை திரில்லைத் தருது. ஒவ்வொரு கேம்லேயும் லெவல் கடக்கும் போது எத்தனை தன்னம்பிக்கையா உணர்றேன். ஐ ஃபீல் ஹேப்பி ! பிகாஸ் ஆஃப் திஸ் மொபைல். உன்னை விடவும் இது என்னோட அதிக நேரம் செலவழிக்குது !”.
“ஒகே... ஸாரி விஷ்வா நான் தப்பு செய்ததாகவே இருக்கட்டும். இனிமே என்னை மாத்திக்கிறேன். இந்த மொபைல் கேமினாலே நிறைய பிரச்சனைகள் வரும்டா, படிப்பில் உன் கவனம் சிதறிப்போகும், கண்ணும் மூளையும் பாதிக்கும்!”.
“வாவ்....! வாட் ஏ கிரேட் ஜோக் மாம் !”. “யூ மேட் இட் மா, மறந்திட்டியா என்ன ? “
“போனவருஷம் உங்க கம்பெனியிலே உனக்கு தி பெஸ்ட் கேம் டெவலப்பர்ன்னு அவார்ட் கொடுத்தாங்களே மறந்துட்டியா ?!” “ நீ ரெடி பண்ற கேமை நான் மட்டும் விளையாடலை. மில்லியன்ஸ் ஆப் டவுன்லோன்ட்ஸ். அவங்களும் என்னை மாதிரி பிள்ளைங்க தானே அவங்க மேல எல்லாம் உனக்கு அக்கறையே இல்லையா ?!”
“விஷ்வா இது என் தொழில்....?!”
“ம்...!நான் சொல்லலை நீ ஒரு செல்பிஷ் மதர்ன்னு ?!”. இத்தனை நாள் பேச்சுத் துணைக்காவது ஆயா இருந்தா ? பாரு ? எத்தனை பெரிய பிளாட் ? நாலு ரூம், மார்டன் திங்க்ஸ், லக்ஸரி லைப்.! ஆனா என்னைப் பொருத்தவரையில் யாருமில்லா சூன்யம் மம்மி இந்த வீடு. எப்பவும் ஐ பீல் ஒன்லி லோன்லினஸ் !" அம்மாவை திரும்பிப் பார்க்காமல் கதவை அவள் முகத்தில் அடிக்காத குறையாய் சாத்திய மகனை துக்கம் பீறிடும் கண்களோடு பார்த்தாள் மேகா.
“அப்படியே மாறனின் குணம் நான்சி. தான் நினைச்சதுதான் சரி. எனக்கு எல்லாம் தெரியுன்னு கர்வம். எப்படியெல்லாம் பேசிட்டான் தெரியுமா ?” மாலை பேசிச் சென்ற மகன் இரவு உணவிற்குக் கூட வெளியே வராமல் கதவை அடைத்து சாத்தியிருந்ததை தன் தோழி நான்சியின் சொல்லி புலம்பினாள் மேகா.
சின்னப் பையன் தானே மேகா”? சீக்கிரம் புரிஞ்சிக்குவான். !”
“எனக்கு அந்த நம்பிக்கை இல்லை நான்சி ?!” “அவனோட எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு. ஆயாவையும் நிறுத்திட்டேன் ?”.
“விஷ்வாவோட மேஜர் பிரச்சனை தனிமைதான் அதை நீ நினைச்சா போக்கலாம் என்றாள் நான்சி.
“புரியலை. ?!”
“நேத்து நம்ம டீம் ஹெட் சொன்னதுதான். சென்னையிலே புதிதாக திறக்கப்போற மால்லே ஒரு ப்ளோர் முழுக்க கேம்ஸ் ஸ்பாட் தொடங்க போகிறோம் இல்லையா ? அதுக்கு உன்னை தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னாறே ? அந்த ஐடியா பெட்டர் அதை கன்சிடர் பண்ணு !”.
“நான் சென்னைக்கா ? உனக்கு எல்லாம் தெரிந்தும் நீ.....?! “
“மேகா இன்னும் எத்தனை நாளைக்கு ஒளிஞ்சிக்கப் போறே ?! விஷ்வா உன்னைப் புரிஞ்சிக்கணுன்னா அவன் நல்ல குடும்ப சூழல்ல வளரணும் இன்பேக்ட் உன் பேரண்ட்ஸ். அண்ணா பேமிலி இதெல்லாம் கூட இருக்கும் போது அவன் தனிமையை மறப்பான்.
பெரியவங்களோட அரவணைப்பில் உன்னைப் பற்றிய அபிப்ராயங்கள் கூட மாறும். நீ மாறனை நினைச்சு பயப்படறதா இருந்தா 14வருஷம் கிட்டத்தட்ட ஒரு வனவாச காலம். யாருக்குத் தெரியும் உனக்கு பதிலா அவரோட வாழ்க்கையில் யாராவது வந்திருக்கலாம் இல்லையா ?” இந்த வார்த்தையைக் கேட்ட போதே, மேகாவின் மனதில் ஏதோ மளுக்கென்று உடைவதைப் போல இருந்தது.
“இது உனக்கு ஒரு வாய்ப்பு. விஷ்வாவைக் கூட்டிட்டு கிளம்பு. தனியா வாழ்ந்தது போதும் மேகா, குடும்பத்தோட அனுசரணைகள் உன்னோட வேதனையைப் போக்கும். மனசைப் போட்டு அலட்டிக்காம எம்.டிக்கு சென்னை போக ரெடின்னு ஒரு மெசேஜ் போட்டுட்டு தூங்கு. காலையிலே ஆபீஸ்லே பார்க்கலாம் !”
நான்சியின் ஃபோனை அணைத்துவிட்டு, அதுவரையில் சத்தமின்றி ஓடிய டிவியைப் பார்த்தாள். “ சென்னையில் ஒரே நாளில் நான்கு சிறுவர்கள் காணவில்லை !” என்று பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது. டிவியை அணைத்துவிட்டு படுக்கைக்கு நகர்ந்தாள் மேகா. இன்னும் சில நிமிடங்கள் அதை ஒடவிட்டு இருந்தால் இந்த வழக்கை விசாரிப்பது சிபிஐ பிரிவில் உள்ள அதிகாரி மாறன் என்று அவள் தெரிந்திருப்பாள். ஆனால் விதி அவள் முன் கண்ணாமூச்சு காட்டியது.
தொடரும்...
-- லதா சரவணன்