Skip to main content

பணக்காரன் மட்டும்தான் பறக்கணுமா? - ஜி.ஆர்.கோபிநாத் | வென்றோர் சொல் #10

Published on 12/08/2020 | Edited on 13/08/2020

 

G.R Gopinath

 

 

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம் அது. விமானப் போக்குவரத்து என்பது பணக்காரர்களும், செல்வந்தர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. வான்வழிப் பயணம் அவர்களுக்கே உரிய எழுதப்படாத பிறப்புரிமை என்றொரு சூழலும் நிலவியது. அப்போது இந்தியாவில் விமான வழிச்சேவை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை வெறும் 1% சதவிகிதம்தான். ஆனால் இங்கு பல விமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அந்த 1% மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்காக அவர்களுக்குள் கடும் போட்டி நிலவிவந்தது. அந்த சமயத்தில் 'ஏர் டெக்கான்' என்றொரு நிறுவனமும் களத்தில் குதித்தது. ஆனால் அந்த நிறுவனம் தன் வாடிக்கையாளராக கருதியது இந்தியாவின் இன்ன பிற 99% மக்களை. ஆம்... விமான சேவையை பயன்படுத்தாத மக்களும் இனி விமானத்தில் பறக்க வேண்டும், விமானப் போக்குவரத்து என்பது சாதாரண, நடுத்தர மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என அதில் வியக்கத்தகு புரட்சியை செய்தார் கர்நாடக வான்வெளி ஈன்றெடுத்த G.R கோபிநாத்.

 

கர்நாடக மாநிலத்தில் எளிய கிராமத்தில் பிறந்தவர் G.R கோபிநாத். தந்தை ஒரு பள்ளியாசிரியர். தன்னுடைய 9 வயது வரை பள்ளி வாசம் படாமல் வீட்டில் தந்தையின் கவனிப்பில் பாடங்கள் படித்து வந்தார். பின் ஐந்தாம் வகுப்பில் நேரடிச் சேர்க்கை. பள்ளிக்காலங்களில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியம் அவருக்குள் ஏற்படுகிறது. பள்ளிப்படிப்பை முடித்த பின் கடினமான பயிற்சியால் ராணுவத்தில் கேப்டனாக பணியில் சேர்கிறார். வங்காளதேசம் தனிநாடு கேட்டு நடைபெற்ற போரில் பங்கெடுத்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. உள்ளுக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும், தனித்து ஏதாவது முத்திரை பதிக்க வேண்டும் என்ற கனவும் ராணுவப் பணியின் மீது அவருக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. விருப்ப ஓய்வுக்குப் பின் பட்டுப்பூச்சி வளர்ப்பில் ஈடுபடுகிறார். பழமையான தொழிலாயினும் அவர் புகுத்திய புதுமையான முயற்சிகள் அங்கீகாரத்தையும், விருதுகளையும் அவருக்கு வாங்கித்தந்தன. காலப்போக்கில் மல்பெரி இலைகள், பட்டுப்பூச்சிகளின் மீதும் மனம் பெரிதாக ஒட்டவில்லை. இதைவிட இன்னும் பெரிதாக செய்யவேண்டும் என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு நண்பருடன் இணைந்து 'டெக்கான் ஏவியேஷன்' எனும் விஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்குகிறார். பேரும், புகழும், பணமும் வந்து குவியத்தொடங்கின. ஆசைப்பட்டது போல கனவுகளும் இறக்கை கட்டிப்பறந்தன. இருந்தாலும் மனம் திருப்திப்படவில்லை. 'ஏன் பணக்காரன் மட்டும்தான் பறக்கணுமா?' என்ற கேள்வி உள்ளுக்குள் உறுத்தத்தொடங்கியது. விடையாகக் கிடைத்ததுதான் 'ஏர் டெக்கான்'. அதன் பின் நடந்தவையெல்லாம் வரலாற்று மாற்றம்..

 

"நான் என்னுடைய ஹெலிகாப்டரில் பாறைகளுக்கு மேலே பறக்கும்போது கீழே இருந்து  எதிரொளி வரும். அது என்னை மிகவும் பரவசப்படுத்தும். ஒரு முறை இன்னும் கொஞ்சம் இறக்கமாக செல்லுங்கள் என்று விமானியிடம் கூறினேன். அப்போது ஊரின் நடுவே டீவி ஆன்டனாக்கள் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்தியாவில் பட்டினியால் வாடும் மக்கள் நிறைய உள்ளனர் என்ற புரிதல்தான் முன்புவரை இருந்தது. ஆனால் அந்த காட்சி வானில் இருந்து பார்க்கும்போது என் புரிதலை மாற்றியது. உண்மையில் இந்தியா என்பது பட்டினியால் வாழும் மக்கள் நிறைந்த நாடு அல்ல.. இது பட்டினியால் வாடும் நுகர்வோர்கள் நிறைந்த நாடு. நம் இந்திய மக்களால் விமான டிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்தையும் வாங்க முடிகிறது. இவர்களால் விமான டிக்கெட்டுகளும் வாங்க முடிய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அவர்கள் வசதிக்கேற்ப ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இதைத்தொடங்க எவ்வளவு பணம் தேவைப்படும், விமானம் வாங்க எவ்வளவு பணம் வேண்டும் என எந்த ஆலோசகரிடமும் விவாதிக்கவில்லை. உடனே தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். 15 வருட பழமையான விமானம் ஒன்றைத்தான் முதலில் பறக்கவிட்டோம். தங்கள் வாழ்வில் விமானத்தில் பறக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர்கள் எல்லாம் பறக்க வழி செய்தோம், அதுவரை விமானப் போக்குவரத்து சென்றடையாத பல இடங்களை வான்வழி இணைத்தோம். வெகுவிரைவிலேயே ஏர் டெக்கான் 'மக்கள் விமானம்' என்ற பெயரை எடுத்தது. பெரும் லாபநோக்கத்தோடு டிக்கெட் விலையை வைத்து 1% மக்களை மட்டும் பறக்க வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய மக்களின் விமானப்பயன்பாட்டை பரவலாக்க வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது".  

 

இவரது கதைதான் 'சூரரைப் போற்று' என்ற பெயரில் சூர்யா நடிக்கும் படமாக வெளிவர இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் நமது முதல் வேலையிலேயே காலம் முழுக்க இருந்துவிடுவதுண்டு. நிறுவனங்கள் மாறினாலும் வேலை ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தனது பல்வேறு கனவுகளை துரத்தி பிடித்திருக்கிறார். 'இந்தியர்கள் பறக்க வேண்டும்... அதுதான் என்னுடைய கனவு...' என தன் கனவுகளுக்கு இறக்கை கட்டி விட்ட G.R கோபிநாத்தின் வாழ்க்கைப்பயணம் நமக்கு பல படிப்பினைகளைத் தரும்.