டெல்லி போலீஸ், திவாகர் மண்டல் என்பவரை 2017ல் கைது செய்தது. அவரின் வீட்டிலிருந்து மட்டும் நூற்றுக்கணக்கான மொபைல் சிம் கார்டுகளை எடுத்தனர். இதுபற்றி போலீஸார் அவரிடம் விசாரித்தபோது, “ஒரு புராஜெக்ட்டுக்கு ஒரு செல் நம்பரை தான் யூஸ் பண்ணுவோம். ஒன்லி அவுட்கோயிங் கால்ஸ் மட்டும்தான்... இன்கம்மிங் கால்களை அட்டன் செய்யமாட்டோம். புராஜெக்ட் சக்சஸ் ஆனதும் அந்த சிம் நம்பரை யூஸ் பண்ணமாட்டோம். ஒருத்தர் சிக்கும் வரை ஒரே நம்பர் தான்” என்று தெரிவித்தார்.
“இவ்ளோ சிம் கார்டுகளை எப்படி வாங்குறீங்க?” என போலீஸ் கேட்டபோது, “நெட் ஒர்க் கம்பெனிகளோட ஏஜென்ஸிகளுக்கு டார்க்கெட் இருக்கு. அந்த டார்க்கெட்களை முடிக்க நிறைய சிம் கார்டுகளை விற்பாங்க, நாங்க அவுங்ககிட்ட நேரடியா வாங்கிக்குவோம்” என்றார்.
“அதற்கு ஐடி புரூஃப் வேணாமா?” என போலீஸ் கேட்க, “கொஞ்சம் பணத்தை தந்தா ஏற்கனவே சிம்கார்டு வாங்கனவங்க தந்த ஐடி புரூஃப்ல தருவாங்க. அதவச்சி 9 சிம் கார்டு வரை வாங்கலாம்” என்றார். “நீ 107 சிம்கார்டுகள வச்சிருக்கியே? அவ்ளோ வாங்கறதுக்கு ஐ.டி புரூஃப் எங்கிருந்து கிடைச்சது?” என்று போலீஸ் கேட்க, “ஐடி புரூஃப் சேல்ஸ் பிஸ்னஸ் பெருசு சார். நெட் ஒர்க் கம்பெனி டீலருங்க அவங்ககிட்ட வர்ற ஐடிகளை இன்னொரு நெட் ஒர்க் கம்பெனிகள்கிட்ட தருவாங்க. அவுங்க தங்களிடம் இருக்கும் ஐடி புரூஃப்களை இவுங்களுக்கு தருவாங்க. அந்த ஐடி புரூஃப்களை வச்சி இதோ பாருங்க நாங்கள் இவ்ளோ சிம் இந்த மாதம் ஆக்டிவேட் செய்திருக்கோம்னு சொல்லுவாங்க. டார்கெட் முடிச்சிட்டாங்கன்னா கம்பெனிகள் டீலர்களை டூர் அழைச்சிட்டு போவாங்க, கிஃப்ட் தருவாங்க. இதற்காக தினமும் ஏதாவது ஒரு ஐடி புரூஃப் வச்சி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்துகிட்டே இருப்பாங்க” என்றார்.
இதையெல்லாம் மண்டல், செல்ஃபோன் ரீசார்ஜ் ஏஜென்ஸியில் வேலை செய்யும்போது தெரிஞ்சிக்கிட்டான். மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, பாட்னா, நாக்பூர், வாரணாசியில் உள்ள நெட்ஒர்க் ஏஜென்ஸிகளிடம், “நாங்க இங்க வந்து வேலை செய்யறோம் ஐடி புரூஃப் இல்ல சிம்கார்டு வேணும் அப்படின்னு கேட்போம். அவுங்க ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம்கார்டுகளை தருவாங்க, அதை வாங்கி பயன்படுத்துவோம். சிலர் பணம் வாங்கிக்கிட்டு நூற்றுக்கணக்கில் தருவாங்க. நாங்க அடிக்கடி அந்த சிம்கார்டுகளை வாங்கியதும் ஏஜென்ஸிகாரங்க சந்தேகமடைஞ்சி கேள்விகள் கேட்டாங்க. அதனால் சில இடங்கள்ல நாங்களே செல்ஃபோன் கடையை திறந்து சிம்கார்டுகளை விற்பனை செய்தோம். அதுக்கு வர்ற ஐடி கார்டுகளை நாங்க பயன்படுத்திக்குவோம். ஜெராக்ஸ் கடைகளை திறந்து அங்க ஜெராக்ஸ் எடுக்க வர்றவங்களோட ஐடி புரூஃப்களை நாங்க தனியா ஒரு செட் பிரிண்ட் எடுத்து வச்சிக்குவோம். அதை பயன்படுத்துவோம்” என்றார்.
இப்படி திருடப்படும் ஐடி புரூஃப்களை வைத்து ஜம்தாரா மாவட்டத்திலுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளார்கள். மும்பை, டெல்லி, பாட்னா, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களுக்கு சென்றால் அங்கு அந்த ஊரில் வசிப்பதுபோல் வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை டூப்ளிக்கெட்டாக தயார் செய்து வங்கி கணக்கை தொடங்குவார்கள். ஒரே நபரின் பெயரில் 4 அல்லது 5 வங்கிகளில் கணக்கு தொடங்குவார்கள். வங்கியில் யார் ஐடி புரூஃப் தந்தாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வார்களே தவிர, அது உண்மையா பொய்யா என ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்.
ஃபோன் பிஷ்சிங் வழியாக ஒருவரை ஏமாற்றும்போது அந்த பணத்தை டூப்ளிகெட் ஆவணங்கள் உள்ள வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவார்கள். பணம் வந்ததும் உடனே எடுத்துவிடுவார்கள். வங்கியில் அட்ரஸ் வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்றால் ஏமாற்றியது ஒருவராகவும், சிக்கியது வேறு ஒருவராகவும் இருப்பார்கள். இதன் பின்பே வங்கிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை செய்தது.
ரேண்டமாக நம்பர்களை கொண்டு முகம் தெரியாத யாரோ ஒருவரிடம் பேசி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பதில் பணம் யாரிடம் உள்ளது? அவர்களது தகவல்களை யாரிடம் இருந்து வாங்குவது என யோசித்தனர் கொள்ளையர்கள். வங்கிகளில் பணியாற்றும் கீழ்நிலை அதிகாரிகள் வழியாகவே, பணம் வைத்திருப்பவர்களின் மொபைல் நம்பர்களை வாங்கி அவர்களிடம் பேசி பணத்தை ஏமாற்றத் துவங்கினர்.
தொடக்கத்தில் சிம்கார்டுகளை மட்டும் மாத்தி, மாத்திப் போட்டு ஒரே மொபைலை பயன்படுத்தி வந்தார்கள். மொபைலின் ஐ.எம்.இ.ஐ நம்பர்களை வைத்து ட்ரேஸ் செய்ய முடியும் என தெரிந்துகொண்டபின் தினம் ஒரு மொபைல் என மாற்றத் துவங்கினர். இதற்காக லாரி ஓட்டுநர்களை பயன்படுத்த துவங்கினர்.
நேஷ்னல் பர்மிட் லாரி டிரைவர்கள் இந்தியா முழுவதும் பயணமாவார்கள். அதில் தங்கள் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் மூலமாக வேறு மாநிலங்களில் திருட்டு செல்போன் வாங்கி விற்கும் கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக செல்போன்களை வாங்கி வரவைப்பார்கள். அதனையே மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள். சிம்கார்டு தூக்கிப் போடுவதுபோல் மொபைலை தூக்கிப் போடுவதில்லை.
இந்த மொபல் ஃபோன்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குரூப்களிடம் கை மாறும். இப்படி கை மாறும் ஃபோன்கள் பெரும்பாலும் பட்டன் ஃபோன்களாகவே இருந்துள்ளன. அதில் ஜீ.பி.ஆர்.எஸ் இல்லாததால் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க முடியாது.
காவல்துறையின் நெருக்கடி, ஆர்.பி.ஐ விதிகளால் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் கே.ஒய்.சி அப்டேட் செய்யச் சொன்னபோது போலி ஆவணங்களை தந்து வங்கி கணக்குகளை உருவாக்கியவர்கள் சிக்கிக்கொண்டனர். ஒரிஜினல் ஐடியில் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் வங்கிக் கணக்குகளுக்கு புரோக்கர்களை உருவாக்கினர்.
உன் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்திக்கிறேன். அதில் வரும் பணத்தை எடுத்து தந்தால் 10 பர்சன்ட் கமிஷன் தர்றேன் எனச் சொன்னதால் வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதிக்க துவங்கினர். இதன் ஆபத்தை உணர்ந்தும் இது போர்ஜரி பணம் எனத் தெரிய வந்ததும் புரோக்கர்கள் தங்கள் கமிஷனை அதிகப்படுத்தி தற்போது 30%ல் வந்து நிற்கிறது.
கொள்ளையடிப்பது நாம், வெறும் பணம் இருப்பு வைத்து மாற்றி தருவதற்கு இவ்வளவு கமீஷன்களா என தங்கள் சொந்தக்காரர்கள் அக்கவுண்ட்டுக்கே மாற்றிக் கொள்கின்றனர். வெளியாட்களுக்கு தரும் கமிஷனை அவர்களுக்கு தருகின்றனர்.
பிஷ்சிங் தொழிலை நன்றாக கற்றுக்கொண்டவர்கள் பயிற்சி மையங்களை தொடங்கி பிஷ்சிங் செய்வது எப்படி என்பதை கற்றுத்தர துவங்கினார்கள். இதன் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜம்தாரா மட்டுமல்லாமல் வேறு சில மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் அதனைக் கற்றுக்கொண்டனர். இப்படி பயிற்சி மையங்கள் அமைத்த சூப்பர் ஸ்டார், ராக் ஸ்டார் போன்றவர்கள். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கற்று தந்தனர். இவர்கள் கற்றுத் தந்தது என்னவோ பிஷ்சிங் அதாவது மோசடிகள்.
இந்தப் பணம் பத்தாது, பத்தாது என யோசித்ததன் விளைவு கற்றுத் தந்தவர்களையே மிஞ்சிவிட்டார்கள். அதாவது குருவை மிஞ்சிய சீடர்கள். இவர்கள் செயலால் அடிக்கடி உயிர்கள் பலியாகத் துவங்கியதால் இதன் விபரீதத்தால் சைபர் செல் அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்.
அப்படி என்ன செய்தார்கள்?
வேட்டை தொடரும்…