முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
ஒரு பெண் தன் கணவர் பல பெண்களுடன் தொடர்பிலிருப்பதாக என்னிடம் வந்து சொன்னார். இந்த சந்தேகங்கள் அவருக்கு எப்படி வந்தது என்று கேட்டபோது, அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாமல் அடிக்கடி வெளியூர் சென்று வருவதை உறவினர் ஒருவர் குத்திக்காட்டிப் பேசியிருக்கிறார். அவர் சொல்லும்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அந்த பெண்ணிடம் எந்தவித ஆதாரங்களும் இல்லை. இதனால் அந்த பெண் தனது சந்தேகத்தை உறுதி செய்துள்ளார்.
உறவினர் சொல்வதை வைத்து எப்படி அந்த பெண்ணின் கணவரை எப்படிக் கண்காணிப்பது என்று வேறு ஆதாரம் இருக்கிறதா? என்றேன். அப்போது அந்த பெண், 500 பக்கங்களுடைய நிறைய கடிதத்தை ஒன்றாக இணைத்து ஒரு புத்தமாகக் கொடுத்தாள். அந்த கடிதங்களைப் படித்தபோது அந்தளவிற்குச் சந்தேகப்படும்படியாகவும் இல்லை. அதனால் உன்னுடைய கணவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் , ஊர் ஊராகச் சென்று செய்யக்கூடிய ஒரு தொழிலை தன் கணவர் செய்து வருவதாகக் கூறினாள். செலவுக்கு பணம் கொடுக்கிறாரா? என்று கேட்டேன். அதில் எந்தவித குறையும் வைக்கவில்லை தேவைக்கேற்ப செலவுக்கு பணம் கொடுப்பதாகச் சொன்னாள்.
அதன் பிறகு நான், உன்னுடைய கணவர் ஊர் ஊராக செல்வார் என்று சொல்கிறீர்கள் பிறகு எப்படி அவரை கண்காணிப்பது செலவு அதிகமாகும் என்றேன். அதற்கு அந்த பெண், அவர் எதாவது ஒரு ஊருக்குப் போகும்போது சொல்கிறேன் கண்காணித்துச் சொல்லுங்கள் என்றாள். அதன் பிறகு அப்பெண்ணின் கணவரை கண்காணித்ததில் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் இல்லையென்பது தெரிய வந்தது. அப்படி எதாவது இருந்திருந்தால் கண்டுபிடித்திருப்போம்.
இதை அந்த பெண்ணிடம் சொன்னபோது, அப்படியெல்லாம் இல்லை கண்டிப்பாக தன் கணவர் பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சொன்னாள். எனக்கு இந்த பெண் மீது சந்தேகம் வந்தது. அதனால் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி வந்தபோது மனரீதியாக அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உறவினரின் பேச்சைக் கேட்டு தன் கணவரைப் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு இருந்திருக்கிறாள். பின்பு அந்த பெண்ணிற்கு சரியான முறையில் கவுன்சிலிங் கொடுத்து, உறவினர்கள் நமக்கு வேண்டும்தான். அதற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் நம்ம வேண்டாம் என்று சில அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம் என்றார்.