மாதம் ஒரு முறை அம்மா வீட்டிற்கு போய் ஆகவேண்டும் என்று அடம்பிடித்த பெண்ணின் காரணத்தை கண்டறிந்த விதம் பற்றி முதல் பெண் துப்பறியும் நிபுணர் மாலதி நம்மிடையே விவரிக்கிறார்.
திருமணமான ஒரு ஆணும், அவரது அப்பாவும் நம்மிடம் ஒரு விசயத்தை கண்டறிந்து தருமாறு வந்தார்கள். தன்னுடய மனைவி மாதம் ஒரு நான்கு நாட்களுக்கு அம்மா வீட்டிற்கு போய்விடுகிறாள். என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். அம்மா வீட்டிற்கு சாதாரணமாக போகும் பெண்ணை ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேட்டால் இது தொடர்ச்சியாக கல்யாணம் ஆன காலத்திலிருந்து நடக்கிறது. அதனால் காரணம் தெரிய வேண்டும் என்றார்கள்.
நாமும் புலனாய்வு செய்ய ஆரம்பித்தோம், அம்மா வீட்டிற்கு செல்ல அந்த பெண்ணோ மாதவிடாயை காரணமாக சொல்லி இருக்கிறாள். ஆனால் அம்மா வீட்டிற்கு போகிறவள், வீட்டில் தங்குவதில்லை ஒரு ஆண் நண்பரை அடிக்கடி சந்திக்கிறாள். அவரோடு சண்டையிடுகிறாள். அவருக்காக நகையை அடகு வைத்து பணம் தருகிறாள். இவை அனைத்தையும் நமது புலனாய்வு வழியாக கண்டறிந்து ரிப்போர்ட்டை அவரது கணவரிடம் கொடுத்தோம்.
அந்த பெண்ணோ அந்த ஆண் நண்பர் தனது அண்ணன் என்றார். பிறகு ஏன் இரவில் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசுகிறாய் என்றதற்கு அப்போதுதான் அவர் நைட் சிப்ட் வேலையில் இருப்பார் என்றாள். பிறகு இன்னும் தீவிரமாக விசாரித்ததில், வீடியோ காலில் பேசும்போதே அதை படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறான். அதனால் அவனிடமிருந்து விலக நகையை அடகு வைத்து பணம் தந்திருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டறிந்தோம். அவளும் ஒப்புக்கொண்டாள்.
பிறகு காவல்துறை உதவியோடு அந்த அண்ணன் என்ற ஆண் நண்பரை அழைத்து கண்டித்து அவர் வைத்திருந்த படங்களை அழித்து பெண்ணின் கணவரிடம் எடுத்துச் சொன்னோம். அவரும் அந்த பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொண்டார். துப்பறியும்போது நம்மால் சுமுகமாக முடித்து வைக்கிற அளவிற்குத்தான் வேலை செய்வோம். நம்மால் முடியாத பட்சத்தில் நாம் காவல்துறையின் உதவியை நாடுவோம் என்பதையும் தெரியப்படுத்தி விடுவோம்.