துப்பறியும் துறையில் தன்னிடம் வந்த வித்தியாசமான ஒரு வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
இந்தத் துறையில் மக்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களது வழக்குகளை எடுத்து கையாளும் போது நமக்கு நிறைய அனுபவங்கள் கிடைக்கும். ஒருவர் நம்மிடம் வந்து அமரும்போதே அவர் பற்றி நமக்குத் தெரிந்துவிடும். வீண் சந்தேகத்தினால் சிலர் கேஸ் கொடுப்பார்கள். ஒரு பெண்மணி நம்மிடம் வந்தார். தன்னுடைய கணவருக்கும் ஃபிளாட்டில் உள்ள ஒரு பெண்மணிக்கும் தொடர்பு இருக்கிறது என்றும், அது குறித்து நாம் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் கேட்டார். நாமும் அந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தோம்.
இருவரும் ஒரே நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்புகின்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருமுறை கூட சந்திக்கவே இல்லை என்பதை அறிந்தோம். 20 நாட்கள் பின்தொடர்ந்த பிறகு அவர்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அந்தப் பெண்ணிடம் தெரிவித்தோம். அதன் பிறகு தன்னுடைய தவறை அவர் உணர்ந்தார். ஆனால் எதுவாக இருந்தாலும் முன்னரே தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் நினைத்ததும் ஒருவகையில் சரிதான். அவர் நினைத்தபடி எதுவும் இல்லை என்பதை அறிந்தவுடன் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். சந்தேகத்தோடு வாழ்க்கையைத் தொடர்வது எப்போதும் சரியல்ல.
ஒரு துப்பறிவாளரின் தனிப்பட்ட வாழ்க்கையும் சாதாரணமானது தான். எங்கள் குடும்ப விழாக்கள் அனைத்துமே கிராமத்தில் தான் இருக்கும். அதற்கு ஏற்றது போல் என்னுடைய பணிகளையும் அதன் சந்திப்புகளையும் நான் வைத்துக் கொள்வேன். எந்த ஒரு விஷயத்தையும் நான் நெகட்டிவாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி தான் சிந்திப்பேன். பெரிதாக எதற்கும் பதட்டப்படவும் மாட்டேன். பல நேரங்களில் டிப்ரசன் வந்தாலும் உடனடியாக மீண்டு விடுவேன். அதற்கு என்னுடைய வளர்ப்பு செல்லப்பிராணிகளும் முக்கியமான காரணம்.