பேய் பயத்தால் இரண்டு நாட்களாக தூங்காமல் இருந்து வயிற்று வலியால் அழுது துடித்த 8 வயது குழந்தைக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
8 வயது பெண் குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என பெற்றோர் என்னிடம் வந்தனர். ஸ்கூலில் விளையாட்டாக குழந்தைகள் எல்லாம் சேர்ந்து பேய், பிசாசு பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்கள். அதில் இந்த குழந்தை நிறையவே பயந்திருப்பதை தெரிந்து கொண்ட மற்ற குழந்தைகள், அந்த குழந்தைக்கு அடிக்கடி பேய் பற்றி பேசி பயப்பட வைத்திருக்கிறார்கள். இதனால், அந்த குழந்தை 2 நாட்கள் தொடர்ந்து தூங்காமல் இருந்திருக்கிறது. அப்படியே தூக்கம் வந்தாலும், எழுந்து அழ ஆரம்பிக்கிறாள். மேலும், பயங்கரமான வயிற்று வலி வருகிறது என்று அழுதிருக்கிறாள். பேய் பிசாசு எல்லாம் இல்லை என குழந்தையிடம் அவளுடைய பெற்றோர் சொன்னாலும், அதை அவள் ஏற்கவேயில்லை. இரண்டு நாட்களாக குழந்தையோடு பெற்றோரும் தூங்காமல் இருந்ததால் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு கோபம் வந்து திட்ட, குழந்தையின் அழுகை இன்னமும் ஜாஸ்தியாக இருக்கிறது.
அப்பொழுது தான், என்னிடம் வந்து சொன்னார்கள். அந்த குழந்தை, நான் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தாலும், பேய் ஒன்று இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். என்ன சொன்னாலும், அந்த பயத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை என்றாள். நான் அவளிடம் பேயை பற்றி மறக்கடித்து பேசினாலும், தொடர்ந்து பேய்யை பற்றி தான் பேசினாள். இதற்கிடையில், குழந்தையின் பயத்தை நாம் அக்னாலஜ்மெண்ட் செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லிக் கொடுத்தேன். பேய் உன்னை ஒன்றும் செய்ய முடியாது, நாங்கள் எல்லாம் கூடவே இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும் என்றேன். அதனை தொடர்ந்து, பேய்யை பற்றி நல்லவிதமாக இருக்கும்படி சில கதைகளை அந்த குழந்தையிடம் சொன்னேன். பேய் நல்லது செய்யும் என்று குழந்தையிடம் சொன்னால் தான் பின்னாளில் அந்த பேய் இல்லவே இல்லை என புரியவைக்க முடியும். அந்த பெற்றோரும், அந்த குழந்தைக்கு நல்ல சப்போர்ட்டிவாக இருந்து ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள்.
காலையில் எழும் போது, நீ துணிச்சலானவள் எனக் குழந்தையிடம் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். குழந்தையின் கண்களை மூட வைத்து பாசிட்டிவான வார்த்தைகளை சொல்ல வேண்டும். கண்ணாடி முன் நின்று அந்த குழந்தையை சிரிக்க வைக்க வேண்டும். அந்த குழந்தை எதில் பெஸ்டாக இருக்கிறதோ அதை பற்றி அடிக்கடி குழந்தையிடம் பேச வேண்டும். இதையெல்லாம் பெற்றோரிடம் செய்ய சொன்னேன். சப் கான்ஸியஸ் மைண்டில் ஸ்டோர் ஆகியிருந்த பயத்தை கொஞ்ச கொஞசமாக அழிப்பதற்காக இதுமாதிரியான விஷயங்களை செய்ய வேண்டும் என சொன்னேன். குழந்தை பயப்படும் போதல்லாம், சலிக்காமல் நாம் அதை அக்லாஜ்மெண்ட் செய்ய வேண்டும் என்றேன். மூன்று நாட்கள் தொடர்ந்து இது போன்ற விஷயங்களை செய்ய சொன்னதில், முதலில் 4, 6 மணி நேரம் என கொஞ்ச கொஞ்சமாக தூங்க ஆரம்பித்தாள். மூன்றாவது நாளில், அந்த குழந்தை முழுவதுமாக தூங்கினாள். அவள் முழுவதுமாக சரியாக ஆனாள். இந்த இடத்தில் பெற்றோர் கரெக்டாக கவுன்சிலிங் வராமல் குழந்தை சரியாகிவிடும், பேய் இல்லை என குழந்தையை மிரட்ட ஆரம்பித்திருந்தால், சப் கான்ஸியஸ் மைண்டில் ஆட்டோமேட்டிக்காக பேய்யினுடைய பயம் அதிகமாகி வளர வளர அந்த பயம் அதிகமாகியிருக்கும்.