Skip to main content

குடும்ப நல நீதிமன்றத்தில் ஆணுக்கு கிடைத்த முதல் நஷ்ட ஈடு - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 25

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Advocate Santhakumari's Valakku En - 25

 

கணவனை ஏமாற்ற நினைத்த பெண் குறித்த வழக்கு பற்றி நம்மோடு குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்துகொள்கிறார்.

 

ராஜேஷ் என்பவர் தன்னுடைய தாயாரோடு என்னை சந்திக்க வந்தார். ராஜேஷ் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். பெண்ணின் குடும்பத்தார் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ராஜேஷின் குடும்பத்தாரே இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து சில காலம் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்தன. பெற்றோர் வீட்டுக்கு அந்தப் பெண் சென்றாள். வீட்டிற்கு சென்ற பிறகு தன்னுடைய வீட்டோடு அவள் மிகவும் நெருங்கினாள். 

 

தொடர்ந்து தன் பெற்றோர் வீட்டிலேயே அவள் தங்க ஆரம்பித்தாள். இது ஒரு அளவுக்கு மேல் சென்றதால் ராஜேஷ் மன அழுத்தத்திற்கு ஆளானார். எனவே இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நாங்கள் மனு போட்டோம். நோட்டீசை வாங்க பெண்வீட்டார் தயாராக இல்லை. ஒருகட்டத்தில் கோர்ட்டுக்கு வந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அப்போது ராஜேஷ் அவளை வீட்டுக்கு வரச்சொல்லி மிகவும் மனமுருகிப் பேசினார். அப்போது சரி என்று சொன்னாலும் அதன் பிறகும் அவள் வீட்டுக்கு வரவில்லை. அதன் பிறகு தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடத்தது. 

 

தன்னை ராஜேஷ் வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததாகவும், அதனால் இந்த திருமணத்தை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் பெண்ணின் தரப்பில் மனு போடப்பட்டது. ராஜேஷுக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது ராஜேஷ் அதற்கு முன் நடந்த சில உண்மைகளை என்னிடம் கூறினார். அதற்கு முன்பே ஒருமுறை பெண்ணின் பெற்றோர் ராஜேஷ் குறித்து போலீசில் புகாரளித்துள்ளனர். அப்போது ராஜேஷை தான் காதலிப்பதாகவும், ராஜேஷுடன் தான் செல்ல விரும்புவதாகவும் போலீஸிடம் அவள் கூறினாள். 

 

அந்த ஆதாரங்களைக் கேட்டு நாங்கள் புதிய மனுவைத் தாக்கல் செய்தோம். போலீசாரிடமிருந்து கோர்ட்டுக்கு ஆதாரங்கள் வந்து சேர்ந்தன. தன்னை விட்டுவிடுமாறு ராஜேஷிடம் அவள் கெஞ்சினாள். தன்னை ஒரு மோசமானவன் போல் தன்னுடைய மனுவில் அவள் சித்தரித்திருந்தது ராஜேஷை மிகவும் பாதித்தது. எனவே அவளை சும்மா விட ராஜேஷ் தயாராக இல்லை. இழப்பீடு கொடுத்தால் தான் விவாகரத்து வழங்க முடியும் என்பதில் ராஜேஷ் உறுதியாக இருந்தார். இறுதியில் 5 லட்ச ரூபாயை இழப்பீடாக பெண் தரப்பு வழங்கியது. இங்கு முதன்முதலில் ஒரு ஆணுக்கு இழப்பீடு பெற்ற வழக்கு இதுதான். நான் நடத்திய வழக்குகளில் முக்கியமான ஒன்றாக இதைப் பார்க்கிறேன்.