இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில், இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத்தொடர்ந்து இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள ரவி சாஸ்திரி, விராட் கோலி ஒருநாள் அணி கேப்டன்சியிலிருந்து விலகினாலும் விலகலாம் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "டெஸ்ட் கிரிக்கெட்டில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது. அதனால் அவராக விட்டுக்கொடுக்க விரும்பாதவரை அல்லது அவர் மனரீதியாகச் சோர்வடைந்து தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கும் வரை அவரே கேப்டனாக இருப்பார். ஆனால் எதிர்காலத்தில் அவர் கேப்டன்சியை துறக்கலாம். அது உடனடியாக நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் இது நடக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "ஒருநாள் போட்டிகளிலும் இதுவே நடக்கலாம். டெஸ்ட் கேப்டன்சியில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் அணி கேப்டன்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவிக்கலாம். அவரது உடலும் மனதும்தான் அது குறித்து முடிவெடுக்கும்" என கூறியுள்ளார்.
அதேபோல் இன்னொரு ஊடகத்திற்குப் பேட்டியளித்த ரவி சாஸ்திரி, அணி தேர்வு சம்பந்தமான கேள்விக்குப் பதிலளிக்கையில், அணி தேர்வில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், போட்டியில் விளையாடும் 11 பேரைத் தேர்வு செய்வதில்தான் தான் பங்கு வகித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அணி தேர்வில் கேப்டனுக்கு கூட ஒட்டு இல்லை என கூறியுள்ளார்.