ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, துபாயின் நடைபெற்று வருகிறது. அதன் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து சுலபமாக வெற்றி இலக்கை எட்டியது.
இதன்மூலம், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற்றது. ஆசிய கோப்பை வரலாற்றிலும், பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த கால போட்டிகளிலும் இல்லாத அளவுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 29 ரன்களே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
யாக்கர் பந்துகளை வீசுவதில் ஜஸ்பிரீத் பும்ரா கெட்டிக்காரர். குறிப்பாக, டெத் ஓவர்களில் பும்ராவின் பந்துவீச்சு அபாரமானதாக இருக்கும். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், “பயிற்சிக்கான நேரம் ஒதுக்கப்பட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்திய வீரர்களும் அந்த சமயம் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சை 20 நிமிடங்கள் அங்கேயே அமர்ந்து கவனித்தேன். விடாப்பிடியாக யாக்கர் பந்துகளை அடுத்தடுத்து வீசிக் கொண்டிருந்தார். அதை மட்டுமே அன்று முழுவதும் பயிற்சியாக மேற்கொண்டிருந்தார்” என புகழ்ந்துள்ளார்.