இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 327 ரன்களை குவித்தது. கே.எல் ராகுல் 123 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முகமது ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின்னர் களமிறங்கிய இந்தியா 174 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இதனைத்தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, முதல் இன்னிங்சை போலவே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 77 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போட்டியை வென்றது.
இந்தியா செஞ்சுரியன் மைதானத்தில் பெரும் முதல் வெற்றி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, தென்னாப்பிரிக்காவில் இதுவரை தொடரை வென்றதில்லை என்ற நிலையில், தற்போது சாதனை வெற்றியுடன் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.