இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களைத் தேர்வு செய்துவருவதில் அரசியல் இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கே தற்போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
துபாயில் நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அதில், தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோகித் சர்மா தலைமையில் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயண வாய்ப்பை யோ-யோ தேர்வினால் இழந்த அம்பத்தி ராயுடு, 20 வயதேயான கலீல் அகமது உள்ளிட்ட பலர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன்சிங், “இந்தப் பட்டியலில் மயான்க் அகர்வாலின் பெயரை எங்கே? தேவைக்கு அதிகமான ரன்களை அணிக்காக குவித்தும், அவரது பெயர் அணியில் இடம்பெறாதது துரதிர்ஷ்டவசமானது. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதிமுறை” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அணித் தேர்வாளர்கள் குழுவில் உள்ள எம்.எஸ்.கே.பிரசாத்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “மயான்க் அகர்வால் கடந்த பல மாதங்களாக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கான வாய்ப்பு கூடிய விரைவில் கிடைக்கும் என்பதை இங்கு தெளிவு படுத்துகிறோம். மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும்போது, அவர் நிச்சயம் அணியில் சேர்க்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.