இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் அவர் தனது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
அண்மைக்காலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறிவரும் விராட் கோலி, தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பொறுப்பினைவிட்டு விலக உள்ளதாகவும், கேப்டன்சியைவிட்டு விலகும் தனது முடிவு குறித்து விராட் கோலி, ரோகித் ஷர்மாவிடமும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடமும் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
மேலும், அக்டோபரில் தொடங்கவிருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி தனது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியைவிட்டு விலகுவார் என்றும், இதுகுறித்த அறிவிப்பை விராட் கோலியே வரும் மாதங்களில் வெளியிடுவார் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகவுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததை மறுத்துள்ளார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை எனவும், விராட் கோலி மூன்று விதமான ஆட்டங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக தொடருவார் எனவும் அவர் கூறியுள்ளார்.