ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 23 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை கடந்த வாரம் நடந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரை விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சி.எஸ்.கே வின் இந்த முடிவை அந்த அணியின் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு, அதற்காக செலவாகும் ரூ.20 கோடியை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.