அம்மாவின் செல்ல மகன்கள் சராசரி ஆண்களை விட, உறவுகளில் அதிக உணர்ச்சி மிகுந்தவர்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள், எளிதில் பொய் கூற மாட்டார்கள், அதேபோன்று, யாருக்கும் துரோகம் செய்வதில்லை. மிகவும் சாந்த குணம் உடையவர்களாக இருப்பார்கள். இருப்பினும், அளவிற்கு அதிகமாக தாய் - மகன் உறவில் நெருக்கமாக இருக்கும்போது சில விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
நெருங்கிய தாய் - மகன் உறவின் சில விளைவுகள் என்ன?
அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாகப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அம்மாவின் செல்ல மகன்கள் திருமணத்திற்குப் பின்னரும், சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு தங்கள் அம்மாவினை சார்ந்து இருக்கிறார்கள். பெரும்பாலும், அவர்கள் தனது அம்மாவின் கருத்துக்களுக்குக் கட்டுப்படுவதை விரும்புவார்கள். இதனால், மனைவியின் தேவைகளையும், கோரிக்கைகளையும் சில நேரங்களில் புறக்கணிக்கிறார்கள். இது சில சமயங்களில் கணவன் - மனைவி உறவுகளுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் கணவர் அம்மாவின் செல்ல மகனாக இருக்கும்பட்சத்தில், அவரைக் கையாள சில உதவிக் குறிப்புகள் இதோ.
தேவையான சில இடங்களைப் பெறுங்கள்:
உங்களது கணவர் எடுக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் ஏதாவது கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால், அன்புடன் மென்மையாக எடுத்துக்கூறுங்கள். உங்கள் கணவர் அவரது அம்மாவின் செல்ல மகன் என்றால், உங்களுடைய தாய் வீட்டில் வசிப்பது நல்ல யோசனையல்ல. ஏனெனில், உங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அவர் அவரது தாயிடம் செல்லக்கூடும். எனவே, இருவரின் நெருங்கிய உறவானது உங்கள் மீது கோபத்தை அதிகரிக்கும்.
எல்லைகளை நிறுவுங்கள்:
சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் கணவர் அவரது அம்மாவைச் சார்ந்து இருக்கலாம். ஆனால், அவர் உங்களுக்கு முன்னால் ஒரு சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் கணவருக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உங்கள் கணவர் தனது முடிவுகளில், உங்களை வழிநடத்த முயற்சிக்கலாம். ஆனால் நீங்கள் அவரை ஒரு தனிநபராகச் செயல்பட அனுமதிக்கும் அளவுக்குக் கருத்துக்களை முன் வைக்க வேண்டும். அதேபோன்று, உங்கள் கணவரிடம் குழந்தைத்தனமாகப் பேசுங்கள், விளையாடுங்கள், இது இருவருக்குமான உறவை வலுப்படுத்தும்.
உங்கள் மாமியாருடன் மோதலைத் தவிர்க்கவும்:
உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களைப் பற்றி உங்களது கணவரிடம் குறை கூறுவதை முடிந்தவரை தவிர்க்கவும். அப்படியே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், மென்மையாகக் கூறி புரிய வையுங்கள். சட்டெனக் குறைகூறிவிட்டால், உங்களது கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறையலாம். நீங்கள் இதனை மென்மையாகக் கையாளும்பட்சத்தில், மாமியார், நாத்தனார் உங்களுடன் சண்டை போட்டால் கூட, உங்கள் கணவர் உங்கள் பக்கம் இருந்து பேசுவார்.
முக்கிய முடிவுகளைச் சொந்தமாக எடுங்கள்:
உங்கள் திருமணம் வரை உங்கள் மாமியார், உங்கள் கணவரின் முக்கிய முடிவுகளை எடுத்திருக்கலாம். இருப்பினும், உங்கள் கணவர் திருமணம் ஆன பிறகு, தனது சொந்த வாழ்க்கையை நிர்வகிக்கும் திறன்கொண்டிருப்பது அவசியம். அதேபோன்று, உங்கள் கணவருடன் நீங்கள் ஒன்றிணைந்து முக்கிய முடிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும், இருவரின் சண்டையிலும் அல்லது வாதத்திலும் இடையில் யாரும் கருத்து சொல்ல வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாமியாருடன் நெருங்கிய உறவு வேண்டும்:
உங்கள் மாமியார் உங்கள் கணவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மற்றும் நெருக்கமான நபராக இருக்கிறார் என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவர் அம்மாவின் செல்ல மகன் என்றால், நீங்கள் உங்கள் மாமியாருடன் நெருங்கிய உறவை உருவாக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களின் முக்கிய ஆலோசனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதேபோன்று, எந்த ஒரு முக்கிய முடிவையும் உங்களது சம்மதம் இல்லாமல் எடுக்காத அளவிற்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், உங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள, அடிக்கடி ஒன்றாக அமர்ந்து இரவு உணவு உண்பது அவசியம்.
எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி திருமணமான பெண்கள் அனைவரும், தங்கள் கணவரை வழிநடத்தி ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியுடன் கடந்து செல்லலாம்.