வன்னி மரத்தை வட இந்தியாவில் "ஷமி விருக்ஷம்' என்பார்கள். சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு இந்த மரத்தை அனைவரும் வழிபடவேண்டும். ஒருவருக்கு சனி தசை நடக்கும்போது, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்தால், அந்த நேரத்தில் பலவிதமான சிக்கல்கள் உண்டாகும். கோட்சார குருவும் சரியில்லையென்றால், அந்த மனிதர் தான் வாழும் இடத்தைவிட்டு வெளியேற வேண்டியதிருக்கும். இதுபோன்ற சமயத்தில் வன்னி மரத்தை வழிபட்டால், அந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம். ஒரு ஜாதகத்தில் சனி லக்னத்தில் இருந்து, அதற்கு 7-ஆம் பாவத்தில் பாவகிரகம் இருந்தால் அல்லது 7-க்கு அதிபதி 6, 8-ல் இருந்தால், அவருக்கு திருமணத்தடை உண்டாகும். திருமணம் தள்ளித்தள்ளி போய்க்கொண்டிருக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் 4-க்கு அதிபதி நீசமடைந்து அல்லது பலவீனமாக இருந்து, 10-க்கு அதிபதி 6, 8-ல் அல்லது அஸ்தமனமாக இருந்தாலும் அல்லது நீசமடைந்தாலும் அந்த மனிதர் கடுமையாக உழைத்தாலும், கிடைக்கவேண்டிய பலன் இறுதி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும். தேர்தலில் நிற்பவர்கள் சிலர் அந்தச் சமயத்தில் பயத்துடன் இருப்பார்கள். பலரால் ஏமாற்றப்பட்டவர்கள் போட்டியின் இறுதி நிமிடத்தில் பயந்து, ஒதுங்கிவிடலாமா என்று நினைப்பார்கள். அவர்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும் செவ்வாயும் பலவீனமாக இருக்கும். 10-க்கு அதிபதி நீசமாக இருக்கும். அவர்கள் போட்டியின் இறுதியில் தோற்றுவிடு வார்கள். அல்லது மற்றவர்கள் அவர்களை ஏமாற்றிவிடுவார்கள்.
ஜாதகத்தில் செவ்வாய், சனி 6, 8, 12-ல் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கையில் மாரகாதிபதி தசை நடக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லா விட்டால் அவரை மற்றவர்கள் ஏமாற்றி விடுவார்கள். மனக்கவலை, உடல்நலக்கேடு உண்டாகும். ஜாதகத்தில் சூரியன் விரயஸ்தானத்தில் இருந்து, ஜாதகருக்கு சூரிய தசை நடக்கும் போது அவருக்கு அஷ்டமச்சனி, அர்த் தாஷ்டமச்சனி அல்லது ஏழரைச்சனி நடந் தால், அவர் தன் சொத்தை இழக்கவேண்டிய நிலை உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழ நேரிடும். இவர்கள் அனைவரும் வன்னி மரத்தை வழிபட்டால், இந்த பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இப்படிப்பட்ட சிறப்பிற்குரிய வன்னி மரத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.
மகாபாரதக் காலத்தில் பாண்டவர்கள் ஓராண்டு காலம் மறைந்து வாழ்ந்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை வன்னி மர பொந்தில் மறைத்து வைத்தார்கள். ஓராண்டு முடிந்ததும், விஜயதசமியன்று அவர்கள் வன்னி மரத்திற்குப் பூஜைசெய்து, அந்த ஆயுதங்களை எடுத்துப் பூஜை செய்தார்கள். போரில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள். அதனால் விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றி, பூ, பழங்களை வைத்து பூஜை செய்யவேண்டும். வன்னி மரத்தின் இலைகளை வீட்டிற்குக் கொண்டு சென்று, பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் கிரக தோஷத்திலிருந்து விடுதலை கிடைக்கும். சனியின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். பகைவர்களின் நோக்கம் நிறைவேறாது. பயஉணர்வு இருப்பவர்கள் வன்னி மரத்தை வழிபட்டு, அதன் இலைகளைத் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால், பயம் நீங்கிவிடும்.
பயணம் செல்பவர்கள் வன்னி மரத்தை வழிபட்டுச் சென்றால் எந்தவித ஆபத்தும் உண்டாகாது. விஜயதசமியன்று பூஜைசெய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை தசமியன்று (10-ஆவது நாள்) வன்னி மரத்திற்கு பூஜை செய்ய வேண்டும். அதன் இரண்டு இலைகளைக் கொண்டு வந்து வீட்டில் வைத்தால் அவர்களுக்கு நன்மைகள் நடக்கும். போட்டியில் வெற்றி காண்பார்கள். வீட்டில் சந்தோஷ சூழல் உண்டாகும்.
பரிகாரங்கள்
வீட்டில் சந்தோஷம் நிலவுவதற்கு, பணவசதி பெருகுவதற்கு, சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாவதற்கு... விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றி, அதை மூன்று முறை சுற்றிவரவேண்டும். அதன் இலையை வீட்டில் கொண்டுவந்து வைத்தால், கிரக தோஷம் நீங்கும்.
கடுமையாக உழைத்தும் அதற்குரிய பலன் கிடைக்காதவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்ட வர்கள் பகல் 11.30 மணியிலிருந்து 12.00 மணிக்குள் வன்னி மரத்திற்கு ஒரு தீபம் ஏற்றி நான்குமுறை சுற்றிவந்தால் பலன் கிடைக்கும். போட்டியிலோ தேர்விலோ தேர்தலிலோ கலந்துகொள்ளும்போது மனதில் பயஉணர்வு தோன்றுபவர்கள் பகல் 11.45 மணியிலிருந்து 12.15 மணிக்குள், வன்னி மரத்தை ஒன்பதுமுறை சுற்றிவரவேண்டும். தீபமேற்றி பூஜை செய்ய வேண்டும். அதன் இலைகளை எப்போதும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும். இதனால் பயம் நீங்கும்; வெற்றி கிடைக்கும். தொழில் வெற்றியைப் பார்க்காதவர்கள், தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துகளைச் சந்திப்பவர்கள் விஜயதசமியன்று வன்னி மரத்தை வழிபடவேண்டும். அதன் இலையை தொழிற்சாலையில் வைத்தால் பிரச்சினைகள் தீரும்.