தைப்பொங்கலன்று விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானுக்குப் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுகிறோம். இதேபோல் ஒவ்வொரு மாதமும் வரும் சப்தமி திதியன்று விரதம் மேற்கொண்டு, சூரிய பகவானை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளமென்று ஞான நூல்கள் கூறுகின்றன.
சிவபெருமானின் வலது கண் சூரியனாகக் கருதப்படுகிறது. அந்தக் கண்ணிலிருந்து வெளிப்படும் ஞானசக்தியாகிய "அருள் ஒளி' ஒரு சப்தமி திதியில் வெளிப்பட்டதாகவும், அது மிகுந்த வெப்பமுடனிருந்ததால் உலக நன்மைக்காக அந்தக் கதிர்களை தேவ சிற்பியான விஸ்வகர்மா பட்டை தீட்டிக் குறைத்தார் என்றும், அந்த நிகழ்வு நடந்தது ஒரு சப்தமி திதி என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
அந்த சப்தமி திதியில் விரதம் மேற்கொண்டு சிவபெருமானையும் சூரியனையும் வழிபட, நவகிரகங்கள் தரும் துன்பங்கள் நீங்கி, சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழலாமென்று புராணம் கூறுகிறது.
தை மாத வளர்பிறை சப்தமி திதியன்று விரதம் மேற்கொண்டு சூரிய பகவானை வழிபட்டு, வேத விற்பன்னர்களுக்கு அன்னதானம், தட்சணை அளித்தால் நான்குவிதமான பேறுகளைப் பெறலாம். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் பெறுவதுடன் இறுதியில் சொர்க்கமும் பெறலாம்.
மாசி மாத வளர்பிறை சப்தமியன்று விரதம் மேற்கொண்டு சூரியனை வழிபட துன்பங்கள் நீங்கும். சுகமான வாழ்வு நிறைந்து காண்பார்கள்.
பங்குனி மாத வளர்பிறை சப்தமியில் வழிபட்டால் தீயோர் விலகுவர். தீயசக்திகள் அண்டாது. நல்லோர் நட்பு கிட்டும்.
சித்திரை வளர்பிறை சப்தமியில் சூரிய பகவானையும் சிவபெருமானையும் வழிபட எண்ணிய காரியங்கள் கைகூடும்.
வைகாசி வளர்பிறை சப்தமி விரதத்தால் முகத்தில் பொலிவு கூடும். பெண்கள் லட்சுமி கடாட்சத்துடன் திகழ்வார்கள்.
ஆனி மாத வளர்பிறை சப்தமி விரதத்தினால் உடல் வளம்பெறும்; நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
ஆடி மாத வளர்பிறை சப்தமியன்று விரதம் மேற்கொள்வோருக்கு சூரிய பகவான் அருள்கிட்டுவதுடன், இறுதி யில் சூரிய லோகத்தை அடையும் பாக்கியம் பெறுவர்.
ஆவணி மாத வளர்பிறை சப்தமி விரதம் மேற்கொண்டு சூரிய பகவானை காலை வேளையில் வழிபட, குழந்தைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற்றவர்களின் குழந்தைகள் நலமுடனும் கல்வியில் சிறந்தும் விளங்குவர்.
புரட்டாசி வளர்பிறை சப்தமி திதியில் சூரிய பகவானுக்காக விரதம் மேற்கொண்டால் செல்வ வளம் பெருகும். விரும்பிய பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.
ஐப்பசி வளர்பிறை சப்தமியில் சிவபெருமானையும் சூரிய பகவானையும் வழிபட, குடும்பத்தில் எடுத்த காரியங்கள் சுபமுடன் நிறைவேறும். மங்கலம் எங்கும் பொங்கும்.
கார்த்திகை மாத வளர்பிறை சப்தமியில் காலையில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட சங்கடங்கள் தீரும். சந்தோஷம் நிறைந்து காணப்படும். சுகமான வாழ்வுகிட்டும்.
மார்கழி மாத வளர்பிறை சப்தமியில் சூரிய விரதம் மேற்கொள்வோர் ஆனந்த மாக வாழ்வர். உடலில் நோயின் தாக்கமிருந்தால் படிப்படியாகக் குறைந்து குணம் காணலாம்.
இந்தச் சூரிய விரதத்தை முதன் முதலில் மேற்கொண்டவர் கண்ண பரமாத்மாவின் மகன் சாம்பன் என்று புராணம் கூறுகிறது. அழகனான சாம்பன், துர்வாச முனிவரின் தோற்றத்தைப் பார்த்து அவமதித்ததால், முனிவரின் சாபத்துக்காளாகி தொழுநோயால் பீடிக்கப்பட்டு துன்பப் பட்டான்.
தன் தந்தை கிருஷ்ணரின் உபதேசத்தின்படி, சாம்பன் சந்திரபாகா நதிக்கரையில் சூரியனை நினைத்து பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருந்து, தொழுநோயிலிலிருந்து குணமடைந்து பழையபடி அழகாகத் திகழ்ந்தான். அந்த நாள், தை மாத சப்தமி திதி எனப்படுகிறது.
சப்தமி திதிகளில் வழிபடுவதுபோல், "கண்கண்ட தெய்வம்' என்று போற்றப்படும் சூரிய பகவானை தினமும் காலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின்போதும் சூரியனுக்குரிய மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று ஜெபித்து வழிபட்டால், சூரிய பகவான் அருளால் சகல பாக்கியங்களும், சுகமான வாழ்வும் கிட்டுமென்று வேத நூல்கள் கூறுகின்றன.
சூரிய வழிபாட்டு மந்திரம்:
"ஓம் நமோ ஆதித்யாய
புத்திர் பலம் தேஹிமே சதா.'