Skip to main content

குபேர வாழ்வருளும் குடமுழுக்கு தரிசனம்!

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

 A vision of the life of Kubera!

 

எங்கே தெய்வம் இருக்கிறதோ அங்கே அருள் இருக்கிறது. தெய்வம் இருக்குமிடமே கோவில். ஊரென்று ஒன்றிருந்தால் அங்கே கோவிலென்று ஒன்றிருக்க வேண்டும்."கோ' என்றால் இறைவன். "இல்' என்றால் இல்லம். அதாவது இறைவன் குடிகொண்டிருக்குமிடமே "கோவில்' என்பதாகும்.

 

கடவுளுக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, அவரை வணங்கி ஆறுகால பூஜையும் செய்யவேண்டும். நாம் நமக்கு ஒரு வீடு கட்டிய பின்பு எப்படி கிரகப் பிரவேசம் செய்கிறோமோ அப்படி கோவிலுக்கு கும்பாபிஷேகம் என்பது முக்கியமானது. கும்பாபிஷேகம் முடிந்த பின்பு ஆன்மீகப் புராணச் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், இறைவன் மீதானதை குறைந்தபட்சம் 48 நாட்களாவது நடத்தவேண்டும்.

 

மந்திரங்களால் சக்தியூட்டப்பட்ட கும்பங்களிலுள்ள நீரைக் கோவில் உச்சியிலுள்ள கலசங்களுக்கு அபிஷேகம் செய்து, ஆராதனை செய்யவேண்டும். கும்பாபிஷேகம் பலவகைப்படும். புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்துக்குச் செய்யப்படும் கும்பாபிஷேகம் "ஆவர்த்தம்' என்றழைக்கப்படும். வெகுநாட்களாகப் பூஜையின்றி கேட்பாரற்றுக்கிடந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் செய்வது "அனவர்த்தம்' என்றழைக்கப்படும். ஒரு முக்கியமான இடம் மட்டும் புனரமைப்பு செய்வது "புனராவர்த்தம்' என்பதாகும். ஆலயத்தில் தகாத செயல் நடந்துவிட்டால் புனரமைப்பு செய்யும் கும்பாபிஷேகம் "அந்தரிதம்' எனப்படும்.

 

"கும்பம்' என்பது உடலாகும். கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் நாடி நரம்புகளாகும். உள்ளே ஊற்றப்படும் நீர் ரத்தத்தையும், அதனுள் போடப்படும் தங்கம் ஜீவனையும், மேல் வைக்கப்படும் தேங்காய் தலையையும், உள்ளே போடப்படும் தானியம் ஆசனத்தையும் குறிக்கும். இதில் செய்யப்படும் விக்ரகப் பூஜையானது அனுக்ஞை, சங்கல்பம், பாத்திர பூஜை, கணபதி பூஜை, பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்கு ரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம் என்று பலவகை உள்ளன.

 

அதேபோல யாகசாலையிலுள்ள குண்டங்கள் ஏககுண்டம், பஞ்சாக்னி குண்டம், நவாக்னி குண்டம், உத்தமபக்ஷம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த குண்டங்கள் தெய்வங்களைப் பொருத்து மாறுபடும். மேற்சொன்ன ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை வைத்தே செய்யப்படுகின்றன. "பூர்ணாஹுதி' என்பது யாகத்தைப் பூர்த்தி செய்வதாகும். கும்பாபிஷேகம் முடிந்தபின்பு மூல விக்ரகங்களுக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்து, பூஜை, நிவேதனம், கற்பூர தீப ஆரத்தி செய்து, 48 நாட்கள் விசேஷ அபிஷேகம் செய்து மூலவரை முழுசக்தி பெறச் செய்ய வேண்டும்.

 

கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்பவர்கள், ஹோம மந்திரங்களைக் காதால் கேட்பவர்கள், தெய்வத்தையும், ஆலயத்தையும், கும்பாபிஷேகத்தையும் பார்ப்பவர்கள் என பலதரப்பட்டவர்களும் நீண்ட ஆயுள், கல்வி, உடல் ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, நிறைந்த செல்வம் அனைத்தையும் அடைவார்கள். கும்பாபிஷேகத்திற்கு நன்கொடையாக பொருள் கொடுத்தால் புண்ணியம் சேரும். இதனால் நமக்கு நல்ல பதவி கிடைக்கும். இது மறுமைக்கு நாம் சேர்த்து வைக்கும் அருள் சேமிப்பாகும்.

 

கும்பாபிஷேகத்தின் கடைசியில் வைதீகர்கள் ஆசிர்வாதம் என்ற மந்திரத்தை ஓதுவார்கள். அப்போது பக்தர்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரம் முடிந்ததும் "ததாஸ்து' என்று வைதீகர்கள் சொல்வார்கள். "ததாஸ்து' என்றால் "அப்படியே ஆகட்டும்' என்பது பொருள் இதைச் சொல்லும் போது நாம் ஏதாவது தவறானவற்றைப் பேசினாலோ, நினைத்தாலோ அது அப்படியே ஆகி விடும். மேலுள்ள "அஸ்து' தேவதைகள் நமக்கு அருள் பாலிப்பதால், நாம் நல்லது சொன்னால் நல்லது நடக்கும். எனவே நல்லதே நினைத்து நன்மை பெறவேண்டும்.

 

கும்பாபிஷேகத்தன்று நாம் அந்த ஆலயத்திலிருந்து தரிசித்தால் முப்பத்து முக்கோடி தேவர்களும், மாமுனிவர்களும், ரிஷிகளும் நம்மை ஆசிர்வதிப்பார்கள். இந்த ஆசிர்வாதத்தால் நாம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழலாம். நாடும் நலம்பெறும்.