தெய்வ உணர்வை உண்டாக்கும் ஊற்றுக்கண் இடங்களாக ஆன்றோர்கள் அமைத்த ஆலயங்கள் பல உள்ளன. அதில் சோழ வளநாட்டில் கண்களையும் மனதையும் கவரும் ஆலயங்கள் ஏராளம். அவற்றின் புராண வரலாறுகள் மெய்சிலிலிர்க்கச் செய்பவை. அவற்றுள் பட்டீஸ்வரம் ஆலயமும் ஒன்று. இவ்வாலயப் பெருமைகளை சூதமுனிவர், சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக்கூறியதாக தலபுராணம் சொல்கிறது.
அன்னை பராசக்தியானவள் தனித்துத் தவம் செய்ய ஒரு வனத்தைத் தேடினாள். அப்போது தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மரம், செடி, கொடி களாக மாறி அழகிய வனமாகி நின்றனர். அங்கு அன்னையின் தவத்திற்கு உதவிசெய்ய காமதேனு பசு தனது மகளான பட்டியை அனுப்பி வைத்தது. அந்த பட்டிப்பசு இவ்வனத்தில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து நாள்தோறும் பூஜை செய்தது. ஞானவாவி நீரைக்கொண்டும், தன் மடியிலிருந்து பாலைச் சொரிந்தும் அது பூஜித்ததால், அதை மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அந்த மணல் லிங்கத்தில் நிலையாக அமர்ந்து அருள்செய்தார். தேவி தவம்செய்ததால் இப்பகுதி தேவிவனம் என்றும், பட்டி வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்றும், இறைவனுக்கு பட்டீஸ்வரர் என்றும் பெயர் அமைந்தது.
பட்டியின் தாயான காமதேனுவும் இவ்வாலயம் வந்து இறைவனை வழிபட்டு, கேட்டவருக்கு கேட்டதைக் கொடுக்கும் வரத்தைப் பெற்றதாம். ஆகவே இவ்வூர் தேனுபுரி என்றும், இறைவனுக்கு தேனு புரீஸ்வரர் என்றும் பெயர் அமைந்தது. அம்பாள் ஞானாம்பிகை என்று நாமம் கொண்டு அருள்கிறாள்.
இராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம் ஆகிய மூன்று இடங்களிலும் ராமர் லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அவர் வழிபட்ட லிங்கம் ராமலிங்கம் என்னும் பெயருடன் இவ்வாலயத்தில் உள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை சென்று இராவணனோடு போரிட்டு அவனை வதம் செய்தார். இராவணன் தீவிரமான சிவபக்தன்; வீரன்; வீணையில் வித்தகன்; கலைவித்தகன். அப்படிப்பட்டவனை வதம்செய்த ராமபிரானுக்கு சாயாஹத்தி தோஷம் உண்டாயிற்று. அதிலிருந்து விடுபடவே இவ்வாலயத்தில் சிவலிங்க பூஜை செய்து சாபநிவர்த்தி பெற்றார் என்கிறது தலபுராணம். சிவபூஜைக்கு நீர்வேண்டி ராமபிரான் தனது அம்பால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அது ராமதீர்த்தம் என்னும் பெயரில் இங்குள்ளது.
மாளவ தேசத்தில் மேதாவி எனும் முனிவர் வாழ்ந்துவந்தார். அவரிடம் பல மாணவர் கள் பயின்றுவந்தனர். ஒரு நாள் பிரதேஸ் என்னும் முனிவர் தான் செய்யும் யாகத்தில் கலந்துகொள்ளுமாறு மேதாவி முனிவருக்கு தகவல் அனுப்பினார். அவரும் யாகத்தில் கலந்துகொள்ள புறப்பட்டார். அப்போது தமது சீடர்களில் ஒருவரான தர்மசர்மாவை அழைத்து, அங்குள்ள பொருட்கள் மற்றும் பசுக்களையும் கவனமாகப் பாதுகாக்குமாறு கூறிவிட்டுச் சென்றார். சில நாட்களில் யாகம் முடிந்து தனது இருப்பிடம் திரும்பினார், மேதாவி முனிவர். ஆனால், தன் கட்டளைப்படி சீடன் தர்மசர்மா பசுக்களுக்கு உணவு வழங்காமல், அவை பட்டினி கிடந்து மெலிந்து போயிருந்ததைக் கண்டு கோபம் கொண்ட முனிவர், தர்மசர்மாவை "நாயாகப் போகக் கடவது' என்று சாபமிட்டார். தவறுக்கு மன்னிப்பு கேட்டு, சாபவிமோசனத்திற்கு வழி கேட்டு இறைஞ்சினார் தர்மசர்மா. கோபம் தணிந்த முனிவர், "காவிரியின் தென்கரையிலுள்ள தேவிவனம் சென்றால் விமோசனம் கிட்டும்' என்றார். அதன்படி நாய் வடிவிலிருந்த தர்மசர்மா தேவிவனம் வந்து, தல விருட்சமான வன்னிமரமருகே காத்துக்கிடந்தார். அப்போது ஞானவாவியில் நீராடிவிட்டுக் கரையேறிய சிவனடியார்களின் சடாமுடியிலிலிருந்து தெறித்த நீர் தர்மசர்மா மீது பட்டது. உடனே நாயுருவம் நீங்கி பழைய மனித உருவம் பெற்றார்.
காம்பிலிலி நகரத்து அரசன் சித்திரசேனன் நல்லொழுக்கம், நேர்மை, இறைபக்தி மிக்கவன். ஆனால் அவனுக்கு மகப்பேறில்லை. அவன் ஒரு நாள் வேகவதி ஆற்றில் நீராடி, சிவபூஜை செய்த முனிவர்களிடம் சென்று வணங்கி தன் குறைதீர வழிகேட்டான். "முற்பிறவியில் நீ பாவங்கள் செய்ததால் இப்பிறவியில் நல்லவனாக இருந்தும் மகப்பேறில்லை. எனவே உனது துணைவியாருடன் பட்டீஸ்வரம் சென்று, அங்குள்ள ஞானவாவியில் நீராடி, வன்னிமரத்தடியில் பிரம்மஞான மந்திரத்தையும் குமார மந்திரத்தையும் ஜபம் செய்து இறைவனைப் பூஜை செய்தால் புத்திரப்பேறு கிடைக்கும்' என்று கூறினார்கள். அதன்படியே பட்டீஸ்வரம் வந்து இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு, புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். மகிழ்ந்த இறைவன் அழகிய ஒளி உருவத்துடன் தோன்றி, அரசனிடம் ஒரு மருந்தைக் கொடுத்து, அவனது மனைவியை உண்ணச் செய்யுமாறு கூறி மறைந்தார். அதன்படியே செய்து, நற்குணம் வாய்ந்த பல புதல்வர்களைப் பெற்றனர். அந்த தம்பதியர் தை மாத உத்திரட்டாதியில் கொடியேற்றி பத்து நாட்கள் இறைவனுக்கு விழா நடத்தினர்.
திருஞானசம்பந்தர் திருவலஞ்சேரி, பழையாறை இறைவனை வணங்கிவிட்டு அடியார்களுடன் இவ்வாலயம் வந்துகொண்டிருந்தார். அப்போது முதுவேனில் காலம் என்பதால் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. சிறுவனான சம்பந்தன் கொடிய வெப்பத்தை எப்படித் தாங்குவான் என வருந்திய இறைவன் பூதகணங்களிடம் கூறி, அழகிய முத்துப்பந்தலை எடுத்துச்சென்று சம்பந்தன் வெயிலில் படாதவாறு அழைத்துவர உத்தரவிட்டார். சம்பந்தர் இறைவனின் கருணையை வியந்து போற்றியவாறு முத்துப்பந்தலின் நிழலில் ஆலயம் வந்தடைந்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். தொண்டர் கூட்டம் ஆரவாரம் செய்தது. அப்போது பெருமான், சம்பந்தர் தரிசிக்க இடையூறில்லாமல் இருக்க நந்திகளை விலகியிருக்குமாறு பணித்தார். இப்போதும் ஆலயத்தின் எதிரேயுள்ள இரு நந்திகள் விலகியே உள்ள காட்சியைக் காணலாம். கோவிலை வலம் வந்த சம்பந்தர் இறைவனை வணங்கி, "பாடல் மறை' எனத் தொடங்கும் பாமாலை பாடினார். திருஞானசம்பந்தர் சீர்காழியில் ஞானப்பால் உண்டார். திருக்கோடிக்காவலில் ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளங்கள் பெற்றார். திருநெல்வாயில் அறத்துறை எனும் திருவட்டத்துறையில் முத்துச்சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் பெற்றார். திருக்கோளம்புதூரில் நதியைக் கடக்க ஓடம் பெற்றார். பட்டீஸ்வரத்தில் முத்துப்பந்தல் பெற்றார்.
இத்தல துர்க்கை மிகப்பிரசித்தி பெற்றவள். கலியுகத்தில் துர்க்கை வழிபாடு கைமேல் பலன்தரக்கூடியது. ராமபிரான், பரசுராமர் துர்க்கையை வழிபட்டுள்ளனர். பாண்டவர்களுக்கு துர்க்கையை வழிபடுமாறு கிருஷ்ணபரமாத்மாவே ஆலோசனை கூறியுள்ளார். அவளை நினைத்தாலும் ஜபித்தாலும் மரணபயம் நீங்கும். அனைத்து தேவர்களையும் வணங்கிய பயன் கிட்டும். அப்படிப்பட்ட துர்க்காதேவி இங்கு சாந்தசொரூபினியாக, நின்ற கோலத்தில் கையில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றைத் தாங்கி, அபயகரம் அளிக்கிறாள். மனசஞ்சலத்தில்- சங்கடத்தில்-சிக்கலில் உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலரும், "உன்னைவிட்டால் வேறுவழியில்லை' என்று சரணடைந்தால் "இதோ ஓடி வருகிறேன்; உனக்கு இனி கவலையில்லை' என்று உணர்த்துகிறாள் அன்னை துர்க்கை. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ராகு காலத்திலும்; அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி திதிகளிலும் பக்தர்கள் வழிபட்டுப் பலன்பெறுகிறார்கள். ராகுவுக்கு அதிதேவதையான துர்க்கையை வணங்குவதால் ராகுதோஷ நிவர்த்தியும் கிடைக்கிறது.
மாமன்னன் ராஜராஜசோழன் முதல் சோழ மன்னர்கள் பலரும் இவ்வாலய துர்க்கையை வணங்கிய பின்னரே முக்கிய முடிவுகள் எடுப்பார்களாம். போருக்குப் புறப்படும் முன்பு துர்க்கையை வணங்கிச்சென்றே வெற்றிவாகை சூடியுள்ளனர். சோழ மன்னர்கள் பூஜை செய்த விநாயகர், சண்முகர், பைரவர் இவ்வாலயத்தில் உள்ளனர். மன்னர்களின் அரண்மனைக் காவல் தெய்வங்களாக இருந்த இவர்களை, மாளிகைகள் சிதிலமான பிறகு இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
"குடும்பத்தில் குழப்பம் உள்ளவர்கள், பிரச்சினை உள்ளவர்கள், புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள், வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்பவர்கள், அரசுத் தேர்வு எழுதவுள்ளவர்கள் என பலரும் இங்கு வந்து துர்க்கையை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்' என்கிறார்கள் இங்கு வழிபட வந்த திருக்கோவிலூர் சந்திரசேகர் குடும்பத்தினர்.அமைவிடம்: கும்பகோணத்திற்குத் தென்மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமிமலையிலிருந்து தெற்கே நான்கு கிலோமீட்டரில் உள்ளது பட்டீஸ்வரம் ஆலயம். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.