‘மாதங்களில் அவள் மார்கழி’ என்று கவிஞர் கண்ணதாசன் சினிமாவுக்கு பாடல் எழுதியதெல்லாம் பிற்பாடுதான். ஐந்தாம் நூற்றாண்டில், ஸ்ரீகிருஷ்ணர் அருளியதாகச் சொல்லப்படும் கீதையிலேயே, ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று தனது சிறப்பினை பார்த்தனிடம் விவரித்திருக்கிறார், பகவான்.
அப்பேர்ப்பட்ட தெய்வீக மாதத்தில், உஷத் காலத்திலேயே எழுந்து (அதென்ன உஷத் காலம்? பெண் தேவதையான உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறதென்றும், அந்த நேரத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வான்மண்டலத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்பதும் ஐதீகம்) குளித்துவிட்டு, ஆண்கள் வீதிகளில் பஜனைபாடி வருவதும், வாசலில் பெண்கள் கோலமிடுவதும் வழக்கமாக உள்ளது.
மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், பிராண சக்தி அதிக அளவில் கிடைப்பதால், இருபாலரும் அதிக பிராண சக்தியை உள்வாங்குவதற்காகவே, இப்படியொரு கலாச்சாரம் வேரூன்றப்பட்டுள்ளது.
சிவகாசி, நேருகாலனியில் வசித்துவரும் 86 வயது முதியவர் ராமசாமி, “தொடர்ந்து 55 ஆண்டுகளாக நாங்கள் மார்கழி பஜனையை வீதிகளில் பாடி வருகிறோம்” எனச் சொல்லி, “ஒரு நடை வந்துபாருங்களேன்” என்று அழைப்பு விடுத்தார்.
அதிகாலை 5 மணிக்கெல்லாம், கழுத்தில் தொங்கிய ஆர்மோனிய பெட்டியை ராமசாமி இசைக்க, பெரியவர்களும் சிறியவர்களுமாக பாடல்களைப் பாடியவாறு வீதிகளைச் சுற்றிவர ஆரம்பித்தனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், அன்றைய பஜனைச் செலவுகளை ஏற்றுள்ள உபயதாரர் வீட்டில், சூடாக டீ போட்டுக் கொடுத்தனர்.
தொடர்ந்து உற்சாகமாக வீதிகளில் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் நாரயணன்..’, ‘செந்தாமரை மலர் செழித்திடும் வைகைபோல் திருவண்ணாமலை வாழ் கோவிந்தா..’, ‘ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லிப் பாடணும்.. நாவினில் வராவிட்டால் நல்லவரோடு சேரணும்..’, ‘சின்ன சின்ன காவடி.. செந்தில்நாதன் காவடி..’, ‘பக்தர்கள் பஜனைக்கு ஓடி வா சாமி..’ என, பல பாடல்களை சிறுவர்களும் சேர்ந்து ஆடியபடியே பாடினார்கள்.
அந்த ஏரியாவிலுள்ள முனியசாமி கோவில், கடம்பன்குளம் காளியம்மன் கோவிலுக்குச் சென்ற பஜனைக் கோஷ்டியினர், சிவசக்தி விநாயகர் கோவிலுக்கு வந்து, ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்.. சப்கோ சன்மதி தே பகவான்..’ எனப்பாடி நிறைவு செய்தனர். அப்போது, உபயதாரர் தரப்பில் சர்க்கரைப் பொங்கல், சுண்டலெல்லாம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பெரியவர் ராமசாமி நம்மிடம், “முன்பெல்லாம் மார்கழி பஜனைக்கு கூட்டம் நிறைய வரும். இப்போது அப்படி கிடையாது. ஆனாலும், அதிகாலையிலேயே குளித்து தயாராகி, வீதிகளில் பக்திப் பாடல்களைப் பாடி உற்சாகம் பெறும் இன்பத்தை, பரவசத்தை வரும் தலைமுறையினரும் அனுபவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் காரணமாகவே, இந்த ஆன்மிக சேவையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்” என்றார்.
ஆன்மிகம் என்பது வெறும் வார்த்தையல்ல! தன்னை அறிதலும், பிரபஞ்சத்தை உணர்தலுமே!