Skip to main content

“ஆசையை ஒழி; பக்தியை செலுத்தி முக்தியைத் தேடு” - பகவத்கீதையில் கண்ணன்!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 Eliminate desire; Seek Salvation by Paying Bhakti 

 

மனிதன் பிறக்கும்போது ஆடையின்றிப் பிறக்கிறான்; ஆனால் ஆசையின்றிப் பிறப்பதில்லை. ஒரு வயதுக் குழந்தையொன்று தத்தித்தத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிரே ஒரு நாய் பொம்மை இருக்கிறது. அக்குழந்தைக்கு அதன் மேல் ஆசை. தவழ்ந்து போய் அதையெடுத்து, வாயில் வைத்து விளையாடுகிறது.

 

அடுத்து அக்குழந்தை வளர்ந்து ஏழெட்டு வயதாகிறது. அப்போது விளையாட்டின் மேல் ஆசை. இன்னும் வளர்ந்து வாலிபப் பருவம் வரும்போது பல ஆசைகளும் வருகின்றன. அந்த வயதில் உடுக்கும் உடையில் ஆசை; தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆசை; எதைப் பார்த்தாலும் ஆசை. இப்பொழுது மனிதனுக்கு ஆசையென்றால் என்னவென்று புரிந்துவிடுகிறது. இந்த நேரத்தில்தான் அவன் தன்னையுணர்ந்து ஆசையை அறவே விட்டொழிக்க ஆசைப்படவேண்டும்.

 

இந்த வயதில் ஆசையை ஒழிக்கப் பழகிக்கொண்டால், இறுதிவரை ஆசையே வராது. ஆசையைவிட்டால் நிம்மதியாக வாழலாம். பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறான் "எப்புருஷன் ஆசைகளை அறவே அகற்றி, பற்றற்று, அகங்கார மமகாரமின்றி நடமாடுகிறானோ அவன் சாந்தியடைகிறான்.'ஆசை ஒழிந்தால் "நான், எனது' என்பன போய்விடுகின்றன. ஆசை இருந்தால் அனைத்தையும் அடையவேண்டுமென்ற அபரிமிதமான எண்ணம் உதயமாகிறது. அதுவே இறுதியில் அழிவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

 

ஒரு பருந்து தனது அலகில் மீனைக் கவ்விக்கொண்டிருக்கிறது. அது உண்பதற்கு எத்தனையோ புழு, பூச்சிகள் இருந்தாலும் அந்த மீனின்மேல் ஆசை. அதைப் பிடுங்குவதற்காக சில காக்கைகளும் பருந்துகளும் அப்பருந்தைப் பின்தொடர்ந்து கொத்தி ஆரவாரிக்கின்றன. பருந்து எந்தத் திக்கில் பறந்தாலும் அவையும் கூடவே பறந்துசென்றன. தொந்தரவைப் பொறுக்கவியலாமல் அப்பருந்து மீனைக் கீழே போட்டுவிட, உடனே அதை வேறொரு பருந்து கவ்விக்கொள்ள, காகங்களும் மற்ற பருந்துகளும் அந்தப் புதிய பருந்தை தொந்தரவு செய்ய ஆரம்பிக்கின்றன. தப்பித்த முதல் பருந்து இப்போது சாந்தமாய் ஒரு மரக்கிளையில் அமர்ந்துகொண்டது. ஆசையை விட்டொழித்து மீனைக் கீழே போட்டதால் அந்தப் பருந்து நிம்மதியாக இருக்கிறது. அதுபோல நாமும் ஆசையை விட்டுவிட்டால் நிம்மதியாக வாழலாம். ஆசை சிலசமயம் அழிவையும் உண்டாக்கிவிடும். 

 

ஒரு மான் துள்ளித்துள்ளி ஓடுகிறது. அதைத் தனது அம்பினால் வீழ்த்த வேடன் துரத்துகிறான். மான் வேகமாக ஓடுவதால் அதை அவனால் குறிவைத்து அடிக்கமுடியவில்லை. அதற்கு ஒரு யூகத்தைக் கையாள்கிறான். தனது இடுப்பிலிருக்கும் கொம்பையெடுத்து "பூம்... பூம்... பூ,.' என்று ஊதுகிறான். அந்த ஓசையைக் கேட்டு நின்ற மான் காதை சாய்த்து அதைக் கேட்கும்போது வேடன் அம்பெய்து அதை வீழ்த்திவிடுகிறான். அந்த ஓசையின்மீது மான் ஆசை வைத்ததால் அதற்கு அழிவு வந்தது.

 

விட்டில் பூச்சி எரியும் விளக்கின் மீது ஆசைகொண்டு அதில் தானே விழுந்து உயிரை இழந்துவிடுகிறது. குளத்தில் பாசி உள்ளது. வேறு புழு, பூச்சிகளும் உள்ளன. இருந்தாலும் அந்த மீனுக்கு தூண்டில் கட்டிவிடப்பட்ட புழுவின் மீது ஆசை வந்து, தூண்டிலில் சிக்கி தன் உயிரை இழந்து மனிதனுக்கு இறையாகி விடுகிறது.

 

இப்படி ஆசையினால் அழிவுப்பாதையை உண்டாக்கிக் கொள்ளாமல் நாம் ஆசையைக் கைவிட வேண்டும். அதற்கு பதில் பகவான் மீது பக்தி செலுத்த ஆசைப்பட வேண்டும். பகவானிடம் பக்தி செலுத்தினால் அது நம்மை முக்திக்கு அழைத்துச் செல்லும். முக்தியென்பது எல்லாருக்கும் உண்டு. ஒரு சிலருக்கு முதற்பிறவியிலேயே கிடைக்கும். இன்னும் சிலருக்கு அடுத்த பிறவியிலும், மேலும் சிலருக்கு அவர்களின் பாவ, புண்ணியத்தை அனுசரித்து அடுத்தடுத்து பிறந்து, கடைசிப் பிறவியிலாவது முக்தி கிடைத்துவிடும். உலகத்தில் மனிதன் பிறக்கும்போது வித்யாகுணம், அவித்யா குணம் என்ற இரண்டு குணங்களுடன் பிறக்கிறான். இதில் வித்யா குணமுள்ளவன் முக்தியடைகிறான். வித்யாகுணம் என்னவென்பதை கீதை இப்படிக் கூறுகிறது:

 

கண்ணன் கூறுகிறான்: "என்னிடத்தே மனதை வைத்து, என்னிடத்து புத்தியைச் செலுத்தி பக்தியை வளர்த்தால் பின்பு நீயே என்னிடம் வசிப்பாய்; சந்தேகமில்லை.' இதற்கு அர்ஜுனன், "மனதை உன்பால் செலுத்தி பக்தி செய்ய முடியாமல், உறுதியாக இறைவன்பால் வைக்கமுடியாதவர்கள் என்ன செய்வது?' என்று கேட்கிறான்.

 

இதற்குக் கண்ணன் கூறுகிறான்; "தனஞ்ஜயா! இனி சித்தத்தை என்பால் செலுத்த, உறுதியாக வைக்க இயலாவிடின் அப்பியாச யோகத்தால் என்னையடைய விரும்பு!

 

அதாவது மனது உறுதியாக இறைவன்பால் இருக்குமானால் அது முதிர்ந்த பக்தியாகிவிடுகிறது. நல் இயல்பு, கெட்ட இயல்பு இரண்டுக்கும், பழக்கத்தால் ஆகாததை ஆகும்படி செய்யலாம்.

 

அப்பியாசத்தைவிட ஞானம் சிறந்தது. ஞானத்திலும் தியானம் மேலானது. தியானத்தைக் காட்டிலும் கர்மபலத் தியாகம் உயர்ந்தது. தியாகத்தினின்று விரைவில் சாந்தி வருகிறது. சாந்தி வந்தால் முக்தியடையலாம்.

 

பக்தியில் வைதீக பக்தி, ராகபக்தி என்று இரண்டு உள்ளது. பகவந்நாமாவை பலமுறை உச்சாடணம் செய்தல், உபவாசமிருத்தல், தீர்த்தயாத்திரை செல்லுதல், பூஜை செய்தல் போன்றவை வைதீக பக்தியில் சேரும். நெடுங்காலம் பக்தி செய்து, ஈஸ்வரபக்தியில் உயர்ந்த நிலையை அடைதல் ராக பக்தியாகும். உலகப்பற்றிலிருந்து முழுவதும் விடுபட்டு, முழுமையான ஈஸ்வரபக்தி செலுத்தினால் முக்தியடையலாம்.

 

 - ராம சுப்பு