
அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் டிரம்பை நோக்கி சுட்டவர் 20 வயதான தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்பது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞரை பாதுகாப்புப் படையினர் பதிலுக்கு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். மேத்யூ முன்னாள் அதிபர் டிரம்பை நோக்கிச் சுட்ட பொழுது குண்டு அவர் காதினை உரசிச் சென்றுள்ளது. அதனால் ஏற்பட்ட காயத்தில் ரத்தம் வெளிப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் நூலிழையில் டிரம்ப் தப்பியுள்ளது எஃப்.பி.ஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட டிரம்ப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் தற்போது முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் உள்நோக்கங்கள் என்ன; இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது தொடர்பாக எஃப்.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.