இன்றைய சூழலில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போய்விட்டது ஸ்மார்ட்போன்கள். அதில் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்துவது ஆண்ட்ராய்டு போன்கள் தான்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் இந்த ஆண்ட்ராய்டு போன்களுக்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் ”ஏஜெண்ட் ஸ்மித்” என்ற மால்வேர் ஒன்று சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு செயலி போல போனில் குடியேறும் இது, மெல்ல போனில் இருக்கும் மற்ற செயலிகளை பாதிக்கிறது. இந்த வைரஸின் தாக்குதலை பயனாளர்களால் ஆரம்ப காலங்களில் உணர முடியாது என்கிறது இதனை ஆய்வு செய்த நிறுவனம். இந்த மால்வேர் எப்படி வருகிறது, என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பவை குறித்த முழு தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் இணைய சேவையை உபயோகிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தெரியாத இணையதளங்கள், லிங்குகள் ஆகியவற்றிற்குள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.