அமெரிக்கா தடை விதிச்சா என்ன? நாங்க கனடா போவோம்! - இந்தியர்கள் மைண்ட்வாய்ஸ்
அமெரிக்க அதிபர் எச் 1 பி விசாக்களின் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், கனடா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற உடன், எச் 1 பி விசாக்களின் மீது அதிக கெடுபிடிகளை விதித்தார். இதன்மூலம் அமெரிக்கர்களின் வேலையைக் காக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் தொழில்நுட்ப ரீதியிலான வேலைகளுக்கு செல்பவர்களில் உலக அளவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எச் 1 பி விசாக்களின் மீது கெடுபிடிகள் அதிகமானபோது கூட இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் திரிதேயுவின் உலக திறன் வியூகம் என்ற புதிய அறிவிப்பை அடுத்து, கனடாவிற்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை கனடாவிற்கு தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2,000 என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்களில் கணினி மற்றும் மென்பொருள் பொறியியல் வேலைக்குச் சென்றவர்கள் அதிக இடம் வகிக்கின்றனர். இந்த 2,000 பேரில் இந்தியர்கள் 988 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இருப்பது போலவே, சீனாவும், பிரான்சும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கனடாவிலும் வகிக்கின்றன.