ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், 'அலிபாபா' ஜாக் மா வரிசையில் இலான் மஸ்க்-கும், தொழில்துறையில் புதிய சிந்தனைகளை செலுத்தியவர். முக்கியமாக ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் எனும் செயற்கை நுண் அறிவைக் கொண்டு தொழில்துறையில் மாற்றங்களை கொண்டுவந்தவர். இவரது நிறுவனமான டெஸ்லா (Tesla) மின்னணு கார் தயாரிப்பு நிறுவனம் உலக அளவில் பிரபலமானது. இலான் மஸ்க்கின் இன்னொரு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல ஆயத்தமாகி வருகிறது. இப்படி அறிவியல் முன்னேற்றத்தை தொழிலாக நடத்தி வரும் அந்நிறுவனம் தற்போது நிதிநிலையில் பெரும் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை அடுத்த ஆறு மாதத்திற்குள் உரியோருக்கு திருப்பித்தர வேண்டும். அதேசமயம் மற்றொரு தகவலின்படி தற்போது இருக்கும் நிதி நெருக்கடியில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்தவே போதுமான வைப்பு நிதி இல்லை என்று தெரிகிறது. இந்த சவாலில் இருந்து டெஸ்லா நிறுவனம் எப்படி மீண்டுவரப்போகிறது என்று உலக அளவில் உள்ள தொழில் முனைவோர்களும் முதலீட்டாளர்களும் தீவீரமாக கவனித்து வருகின்றனர்.