ரஷ்யா கண்டறிந்த உலகின் முதல் கரோனா தடுப்பூசி அதிபர் புதினின் மகளுக்கு செலுத்தப்பட்டது.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தங்களது நாட்டில் நடைபெற்ற ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் ரஷ்யா அண்மையில் அறிவித்தது. ஆனால், மூன்றாம் கட்ட சோதனைகளைச் சரியாக நடத்தாமல் ரஷ்யா அவசரம் காட்டுவதாக உலக நாடுகள் ரஷ்யாவைக் குறை கூறின. ஆனால், தங்களது மருந்து நூறு சதவீதம் சரியாக பணிபுரிவதாக ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரஷ்ய சுகாதாரத்துறையின் அங்கீகாரத்தை பெற்றதை தொடர்ந்து, முதன்முறையாக புதினின் மகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி ஸ்பூட்னிக்கிடம் பேசிய புதின், "எனது மகள் பரிசோதனையில் பங்கேற்றார். முதல் தடுப்பூசிக்கு பிறகு, அவர் உடல் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருந்தது. அடுத்த நாள் அது 37 டிகிரி செல்சியஸுக்கு சற்று அதிகமாக இருந்தது, அவ்வளவுதான். இரண்டாவது ஊசிக்கு பிறகு, அவரது வெப்பநிலையும் கொஞ்சம் உயர்ந்தது, பின்னர் எல்லாம் இயல்புநிலைக்கு வந்தது. அவர் நன்றாக இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து கண்டறிந்துள்ள இந்த மருந்து விரைவில் அதிகளவில் தயாரிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.