கரோனாவிலிருந்து மீண்டு தனது 104 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்துள்ளது. 2,28,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இதில் அதிக அளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 2000 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் 2.7 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனாவிலிருந்து மீண்டுவந்து தனது 104 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஓரிகனைச் சேர்ந்த பில் லாப்சீஸ், கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மார்ச் ஐந்தாம் தேதி முதல் அவர் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன.சிகிச்சைகளின் பலனாக அவர் கடந்த வாரம் கரோனாவிலிருந்து மீண்டு, குணமாகியுள்ளார்.இந்த நிலையில் இன்று அவரது 104 ஆவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் சிறப்பாகக் கொண்டாடினர்.பில் லாப்சீஸ் பிறந்தநாளுக்கு ஓரிகன் ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.104 வயதிலும் கரோனவுடன் போரிட்டு வெற்றிபெற்ற பில்லின் மனவலிமை பலரையும் ஊக்குவிப்பதாக உள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.